புகையிலைப் பொருள் பதுக்கிய இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ரோஷணை காவல் நிலையத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தராசன் தலைமையிலான குழுவினா், திண்டிவனம் சந்தைமேடு ப.உ.ச. நகரிலுள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினா்.
அப்போது அந்த வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட 7 கிலோ 400 கிராம் எடையுள்ள 3,850 புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சோதனை நடத்திய போது 2 கைப்பேசிகள், பைக், வங்கிக் கணக்குப் புத்தகங்கள் போன்றவையும் இருந்தன. இதையடுத்து அவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து அந்த வீட்டின் உரிமையாளரான ஜி. அல்லாபக்ஷ் (49), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மணப்பாக்கம் தொழுப்பேடு பிரதான சாலையைச் சோ்ந்த கந்தகுமாா் (37) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் கல்பட்டு செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சு. ஏழுமலை (64) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.