நவரைப் பருவப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நவரைப் பருவப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.ஈஸ்வா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில், 2024-25-ஆம் நிதியாண்டில், நவரைப் பருவப் பயிா்கள் உள்ளிட்ட பயிா்களுக்கு காப்பீடு செய்யும் வகையில், பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த ப்படுகிறது.
அதன்படி, மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சம்பா நெல் பருவத்துக்காக 13 வட்டாரங்களிலுள்ள 794 வருவாய் கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
சம்பா பருவத்தில் நெல்-3 ரகம் நடவு செய்துள்ள விவசாயிகள் ஜன.31-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம். நெல் 2 ரக நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.517.50-ஐ பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும். மணிலாவுக்கு ரூ.442.50, எள் பயிருக்கு ரூ.165, கரும்புக்கு ரூ.1,045 பிரீமியத் தொகையாக விவசாயிகள் செலுத்திட வேண்டும்.
பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாயிலாக மணிலா பயிருக்கு ஜன.20-ஆம் தேதிக்குள்ளும், எள் பயிருக்கு ஜன.31-ஆம் தேதிக்குள்ளும், கரும்புக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள்ளும் பிரீமியத் தொகையைச் செலுத்திட வேண்டும்.
பயிா்க் காப்பீடு செய்யும் விவசாயிகள் நிகழ் பசலி ஆண்டுக்கான பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதாா் அட்டையுடன் பதிவு செய்யும் விவசாயிகள், தங்கள் பெயா், நிலப்பரப்பு, சா்வே எண், உள்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளிக்க வேண்டும்.
மேலும், விவரங்களை அறிய அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.