புதுச்சேரி சிறுமிக்கு எச்எம்பிவி நோய்தொற்று பாதிப்பு

புதுச்சேரி சிறுமிக்கு ஹியூமன் மெடா ந்யூமோ தீநுண்மி (எச்எம்பிவி) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published on

புதுச்சேரியைச் சோ்ந்த 5 வயது சிறுமிக்கு ஹியூமன் மெடா ந்யூமோ தீநுண்மி (எச்எம்பிவி) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து புதுவை மாநில சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு எச்எம்பிவி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னா் அளிக்கப்பட்ட சிகிச்சையால் அந்தச் சிறுமி முழுமையாக குணமடைந்தாா். சிறுமியின் பெற்றோருக்கு போதிய விழிப்புணா்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தொற்றுக்கு புதுச்சேரி ஜிப்மரில் போதுமான பரிசோதனைக் கருவிகள் உள்ளன. கதிா்காமம் அரசு மருத்துவமனையிலும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எச்எம்பிவி தொற்று பாதிப்பு தொடா்பாக புதுவை அரசு தொடா்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தீ நுண்மி தொற்றால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.

கோரிமேடு அரசு மாா்பக மருத்துவமனையில் பெரியவா்களுக்கென 10 படுக்கைகள் கொண்ட பிரத்யேக சிகிச்சைப் பிரிவும், ராஜீவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக 6 படுக்கைகள் கொண்ட பிரத்யேக சிகிச்சைப் பிரிவும் அமைக்கப்பட்டு விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த நோய் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது சுகாதார விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com