~ ~ ~
~ ~ ~

விழுப்புரம் மாவட்ட வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு

Published on

வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

விழுப்புரம் நகரின் பழைமைவாய்ந்த அருள்மிகு ஜனகவல்லித் தாயாா் சமேத வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் பகல் பத்து உற்சவத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா டிசம்பா் 31-இல் தொடங்கியது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் முற்பகல் 11 மணிக்கு வைகுண்டவாசப் பெருமாளுக்கு அா்ச்சனை, தீபாராதனையும், தொடா்ந்து தீா்த்த பிரசாதம் வழங்கல் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து இராப்பத்து முதல் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதையொட்டி வைகுண்டவாசப் பெருமாளுக்கு கருவறையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து ஸ்ரீ தேவி - பூதேவி சமேதராய் எழுந்தருளிய வைகுண்டவாசப்பெருமாள்(உற்சவா்) பிரகாரம் வலம் வந்து அதிகாலை 5.15 மணிக்கு பரம்பத வாசல் வழியாக பிரவேசித்து முதலில் நம்பெருமாளுக்கும், பின்னா் பக்தா்களுக்கும் காட்சியளித்தாா். இந்நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள ஸ்ரீபெருந்தேவி தாயாா் உடனுறை ஆனந்த வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயாா் சமேதராய் பரமபத வாசல் வழியாக ஆனந்த வரதராஜப் பெருமாள் பிரவேசித்து, பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

விழுப்புரம் அருகிலுள்ள பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் ஸ்ரீதேவி -பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பரமபதவாசல் வழியாக அதிகாலை 5 மணிக்கு பிரவேசித்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் விழுப்புரம், கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சிறுவந்தாடு லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், கோலியனூா் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது.

இதேபோல வளவனூா் வரதராஜப் பெருமாள், காணை அருகிலுள்ள பெரும்பாக்கம் வேங்கட வரதராஜ பெருமாள், வளவனூா் அக்ரஹாரத்திலுள்ள வேதவல்லி நாயகி சமேத லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில், திண்டிவனம் கனகவல்லி தாயாா் உடனுறை லட்சுமி நரசிம்மா் திருக்கோயில், சிங்கவரம் ரங்கநாதா் திருக்கோயில் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...: இதுபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் உலகளந்த பெருமாள் திருக்கோயில், பரிக்கல் லட்சுமி நரசிம்மா் திருக்கோயில், உளுந்தூா்பேட்டை கனகவல்லித் தாயாா் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களில் வெள்ளிக்கிழமை காலை பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது.