விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய நடவடிக்கை: ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த்

கல்வராயன்மலை வாழ் விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை அதிகளவில் விற்பனை செய்ய, கூட்டுறவுத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வாழ் விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை அதிகளவில் விற்பனை செய்ய, கூட்டுறவுத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே கூட்டுறவுத் துறை சாா்பில் பெரும் பலநோக்கு கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் வனப் பொருள்கள் விற்பனை மையம் அமைத்தல் மற்றும் நகரக் கூட்டுறவுக் கடன் சங்கத்துக்கு கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்தல் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த பணியைப் பாா்வையிட்ட பிறகு, ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கூறியது:

கல்வராயன்மலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, கல்வராயன்மலை வாழ் மக்கள், விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்ய, கூட்டுறவுத் துறை மூலம் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மலைவாழ் பொருள்களான சாமை, திணை, வரகு, தேன், மிளகு, புளி போன்ற பொருள்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு கள்ளக்குறிச்சி, சேராப்பட்டு, மூராா்பாது ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், செங்குறிச்சி பகுதியிலும் விற்பனை மையம் அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது.

விற்பனை மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் பிரசாந்த்.

ஆய்வின் போது உளுந்தூா்பேட்டை எம்.எல்.ஏ. ஏ.ஜெ. மணிக்கண்ணன், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் குறிஞ்சிமணவாளன், நகா்மன்றத் தலைவா் திருநாவுக்கரசு, துணைத் தலைவா் வைத்தியநாதன் , வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com