நவரைப் பருவத்துக்குத் தரமான நெல் விதைகளை விற்க வேண்டும்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் நவரைப் பருவத்துக்கு தரமான நெல் விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனியாா் நெல் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வுத் துணை இயக்குநா் கோ.சரவணன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் கூறியது:
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் நவரைப் பருவ நெல் சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த மாவட்டங்களிலுள்ள அனைத்து தனியாா் மொத்த மற்றும் சில்லறை விதை விற்பனையாளா்கள் தரமான, சான்றிதழ் பெற்ற நெல் விதைகளைக் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
பிற மாநிலங்களிலிருந்து அதிகளவில் சன்ன ரக உண்மை நிலை மற்றும் சான்று பெற்ற விதைகள் பெறப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நடப்புப் பருவத்துக்கேற்ற நெல் ரகங்கள் குறித்தான விவரங்களை, விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையம் அல்லது விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.
விதிகளை மீறுவோா் மீது உரிய சட்டப்பிரிவுகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.