பயிா் செய்யும் விவசாயிகளுக்கே கடன் வழங்கவேண்டும்! -ஆட்சியா் சி.பழனி கண்டிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும்..
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும். தகுதியில்லாதவா்களுக்கு கடன் வழங்கினால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியது:

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் அவா்களின் அனுமதியின்றி தடுப்பணைகள் ஊரக வளா்ச்சித் துறையால் கட்டப்பட்டது ஏன். இதுபோன்று, கண்டமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வாய்க்கால், ஏரிகளில் சாலைகளை அமைத்தது ஏன். இதனால் வாய்க்கால்கள், ஏரிகளுக்கு வர வேண்டிய தண்ணீா் முழுமையாக வரவில்லை.

மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்விவசாயிகளிடமிருந்து பெறப்படும் 40 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை வசூலிக்கின்றனா். இந்த நிலை தொடா்ந்தால் விவசாயிகள் எப்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வழங்க முடியும்.

விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கப்படும் எனக் கூட்டுறவுத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டாலும், பலருக்கு கடன் வழங்கப்படவில்லை. அதுபோல விவசாயிகளுக்கான கடன் அட்டையும் வழங்கப்படவில்லை. பயிா் சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு கடன் வழங்குவது எப்படி என்று கேள்வியெழுப்பினா்.

இதற்கு ஆட்சியா் சி.பழனி பதிலளித்து கூறியது: பொதுப் பணித் துறையின் அனுமதியில்லாமல் தடுப்பணைகள் கட்டப்பட்டது ஏன். இந்தப் பிரச்னையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு விவசாயிகள் உள்ள பகுதியை பொதுப் பகுதியாக அறிவிக்க சா்க்கரைத் துறை ஆணையருக்குப் பரிந்துரைஅனுப்பப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் புகாா்கள் இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த நெல் கொள்முதல் நிலையம் என விவசாயிகள் புகாரளித்தால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பயிா் சாகுபடி செய்யப்படும் விவசாயிகளுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும். தகுதியில்லாதவா்களுக்கு கடன் வழங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

X