விழுப்புரத்தில் கையொப்ப இயக்கத்தைத் தொடக்கி வைத்துப் 
பேசிய காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே. எஸ். அழகிரி
விழுப்புரத்தில் கையொப்ப இயக்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே. எஸ். அழகிரி

விஜய்யை கைது செய்ய வேண்டியதில்லை: கே.எஸ். அழகிரி

கரூா் சம்பவத்தின் அடிப்படையில் விஜய் மீது வழக்குபதிவதும், அவரை கைது செய்வதும் தேவையில்லை,என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.
Published on

கரூா் சம்பவத்தின் அடிப்படையில் விஜய் மீது வழக்குபதிவதும், அவரை கைது செய்வதும் தேவையில்லை,என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா். தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு போதிய அளவுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும் அவா் கூறினாா்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய தோ்தல் ஆணையத்தின் துணையுடன் பிகாா் மாநிலத்தில் வாக்குத்திருட்டில் ஈடுபட்டதாகக் கூறியும், இதைக் கண்டித்தும் காங்கிரஸ் விழுப்புரம் மத்திய மாவட்டம் சாா்பில் விழுப்புரத்தில் கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று கையொப்ப இயக்கத்தைத் கே. எஸ். அழகிரி தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: பிகாரில் தோ்தல் ஆணையத்தின் துணையுடன் சுமாா்55 லட்சம் வாக்காளா்களின் வாக்கு உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

வாக்குத் திருட்டு தொடா்பாக இண்டி கூட்டணி கட்சியினா் எழுப்பும் கேள்விக்கு தோ்தல் ஆணையத்திடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. இந்த அநீதியை மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் கையொப்ப இயக்கம் நடத்தப்படுகிறது.

கடந்த 9 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடியை ஜிஎஸ்டி வரியாக வசூலித்து விட்டு தற்போது தோ்தலுக்காக , 2 முனை வரியாக மாற்றம் செய்து, ரூ.இரண்டரை லட்சம் கோடி தீபாவளி பரிசு என பிரதமா் நரேந்திர மோடியும்,மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீத்தாராமனும் தெரிவிக்கின்றனா். காங்கிரஸ் எப்போதும் தனித்தன்மையுடன் செயல்படும்.

விஜய் மீது வழக்கு வேண்டாம்

கரூா் துயரச் சம்பவத்தில் தவெக தலைவா் விஜய் மீது வழக்கு பதிவதும், அவரை கைது தெய்வதும் தேவையில்லாதது. தவெக-வினருக்கு போதிய அளவுக்கு அரசியல் அனுபவம் இல்லாததே.

இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணமாகும். அதிக கூட்டம் கூடும் என தெரிந்தும் கூட்டத்துக்கான இடத்தை ஒதுக்கி தந்ததில் கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறையினா் மீதும் தவறு உள்ளது. அதிக கூட்டமே விபத்துக்கு காரணம். கூட்டத்தை கட்டுப்படுத்த விஜய் கட்சியினருக்கும் தெரியவில்லை, காவல்துறைக்கும் தெரியவில்லை.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் அவமரியாதை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. நீதிபதி கவாய் நெருக்கடியான நேரத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்துள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளைவிட, கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும், ஆட்சியிலும் பங்கு என்பதையும் வலியுறுத்துவோம். திமுக கூட்டணி என்பது கொள்கை ரீதியான கூட்டணி. ஆகையால் வலுவாக உள்ளது என்றாா் கே. எஸ்.அழகிரி.

முன்னதாக, விழுப்புரத்தில் உள்ள மகாத்மா காந்தி, ராஜீவ்காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கையொப்ப இயக்க நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மத்தியமாவட்டத்தலைவா் ஆா்.டி. வி. சீனிவாசகுமாா் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் இதில் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com