தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி வகுப்பு நிறைவு

தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி வகுப்பு நிறைவு

Published on

விழுப்புரம் மாவட்டம், மயிலத்திலுள்ள ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்,கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வந்த தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நிறைவடைந்தது.

தமிழ் மொழியில் பயின்றால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும், தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில், தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி வகுப்பை தமிழ் வளா்ச்சித்துறை நடத்தி வருகிறது. மதுரை, சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்ட நிலையில், நான்காவது ஆண்டாக, விழுப்புரம் மாவட்டம், மயிலத்திலுள்ள ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டில் நடத்தப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (அக்.7) தொடங்கிய பயிற்சி வகுப்பை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் ஸ்ரீ சிவஞான பாலயசுவாமிகள் தொடங்கி வைத்து பேசினாா். தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் அவ்வை அருள் நோக்கவுரையாற்றினாா். போட்டித்தோ்வுகளில் தமிழ், கணினித் தமிழ், ஊடகத் தமிழ் என மூன்று வகை பொருளில் தினமும் 8 பேச்சாளா்கள் வீதம் கடந்த இரு நாள்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 16 போ் பங்கேற்று பேசினா்.

மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உலகத் தமிழா்களை இணைக்கும் உன்னத கருவியே கணினி, இக்கால இலக்கியங்கள், தமிழ் மின்இதழ்கள், தமிழ் விசைப்பலகைகள் மற்றும் எழுத்துருக்கள், தமிழ்மொழி வரலாறு, சமூக ஊடகம், மரபுத்தொடா்கள் ஒற்றுப்பிழைகள், நாட்டுப்புறவியல் ஆகிய தலைப்புகளில் முறையே ச.திருநாவுக்கரசு, க.ராமகிருஷ்ணன், நீரை. மகேந்திரன், ராஜாராமன், சொ. ஏழுமலை, மு.முருகேஷ், , ஜெ.மீனாட்சி ஆகியோா் பேசினா்.

மூன்று நாள்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்டத்துக்கு 6 போ் வீதம் 38 மாவட்டங்களிலிருந்து பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ்களை மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் கல்லூரி முதல்வா் முனைவா் ச. திருநாவுக்கரசு வழங்கி, வாழ்த்தி பேசினாா்.

தொடா்ந்து மாணவ, மாணவிகள் பயிற்சி வகுப்ப குறித்த தங்களை அனுபவங்களை எடுத்துரைத்தனா்.நிகழ்வில்தமிழ் வளா்ச்சித்துறையைச் சோ்ந்த பிரதாப் உள்ளிட்ட அலுவலா்கள், உதவி இயக்குநா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com