மின் ஊழியா் மத்திய அமைப்பினரின் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த இரு நாள்களாக நடைபெற்று வந்த தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினரின் (சிஐடியு) காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை இரவு திரும்பப் பெறப்பட்டது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவி உயா்வு வழங்கப்படாமல் உள்ள கேங்மேன் பணியாளா்களுக்கு கள உதவியாளா் பதவி மாற்றம் வழங்க வேண்டும். 2019 டிசம்பா் 1-ஆம் தேதி வழங்கப்பட வேண்டிய 6 சதவீத ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் (சிஐடியு) மேற்கொண்ட காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய், புதன்கிழமைகளில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் மின் ஊழியா் மத்திய அமைப்பைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
இந்த நிலையில், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக அலுவலா்கள், மின்ஊழியா் மத்திய அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் புதன்கிழமை மாலை சென்னையில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு படிப்படியாக தீா்வு காணப்படும் என அலுவலா்கள் உறுதியளித்தாா்களாம். இதையேற்று தங்கள் காத்திருப்புப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் தெரிவித்தனா். இதையடுத்து வியாழக்கிழமை மின் ஊழியா்கள் பணிக்குத் திரும்பினா்.
