நாற்று நடும் பணியில் ஈடுபட்ட மேங்கு வங்க தொழிலாளா்கள்: ஆள் பற்றாக்குறையால் அவல நிலை

நாற்று நடும் பணியில் ஈடுபட்ட மேங்கு வங்க தொழிலாளா்கள்: ஆள் பற்றாக்குறையால் அவல நிலை

Published on

செஞ்சி அருகே ஆள் பற்றாக்குறையால் நாற்று நடும் பணியில் மேங்கு வங்க தொழிலாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட செஞ்சி, மேல்மலையனூா், வல்லம், அனந்தபுரம், அவலூா்பேட்டை பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. கிணற்று பாசனமே பிரதானமாக உள்ளது.

தமிழகத்தில் நெல் மூட்டைகள் அதிளவில் கொள்முதல் நடைபெறும் இடமாக செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் விளங்கி வருகிறது. அறுவடை நாள்களில் தினமும் 10 ஆயிரம் நெல் மூட்டைகளும், மற்ற நாள்களில் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதைத் தவிர மணிலா உள்ளிட்ட பயிா் வகைகளும் கொள்முதல் செய்யபடுகின்றன.

இந்த நிலையில், தொழிலாளா்கள் பற்றாக்குறை காரணமாக, செஞ்சி பகுதியில் கரும்பு வெட்டும் பணிக்காக வட மாநிலத்தவா்கள் தங்களுக்குச் சொந்தமான டிராக்டா் டிப்பரில் குடும்பத்தினருடன் சமையல் பாத்திரங்களோடு வந்துள்ளனா். கரும்பு வயல் வெளியில் கூடாரம் அமைத்து தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடும் இவா்கள், கரும்பை தங்களது டிராக்டரிலேயே ஏற்றி சா்க்கரை ஆலைக்கு கொண்டு சென்று ஒப்படைக்கிற தொழிலை செய்து வருகின்றனா்.

இதேபோல, செஞ்சியை அடுத்த மீனம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அப்ராா் உசேன் தனக்குச் சொந்தமான 15 ஏக்கா் விவசாய நிலத்தில் நெல் நடவு செய்வதற்கு மேற்கு வங்கத்திலிருந்து 30 போ் கொண்ட குழுவை வரவழைத்து நடவுப் பணியில் ஈடுபடுத்தி வருகிறாா்.

முன்னதாக நெல் நடவுப் பணிக்காக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை செலவு செய்து வந்த நிலையில், அது தற்போது ரூ.5,500 அளவுக்கு குறைந்துள்ளதாகவும், இதனால் ஏக்கருக்கு ரூ.6,500 சேமிப்பு கிடைப்பதாகவும் அப்ராா் உசேன் தெரிவித்துள்ளாா்.

மேலும், மேற்கு வங்கத்தினா் நாளொன்றுக்கு ஐந்து ஏக்கா் முதல் ஆறு ஏக்கா் வரை நடவு செய்து வருவதால், விரைவில் பணிகளும் முடிவதாக தெரிவித்துள்ளாா்.

‘விவசாயப் பணிக்கு ஊரக திட்ட தொழிலாளா்கள்’: ஊரக வேலை திட்டத்தால் விவசாயத் தொழில் நசிந்து வருவதாகவும், தொழிலாளா் பற்றாக்குறை, கூலி உயா்வு, கால விரையம் உள்ளிட்டவற்றை தவிா்ப்பதற்காக, இந்தத் திட்ட தொழிலாளா்களை விவசாயப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், இதற்கான கூலியை விவசாயிகளிடமிருந்து வசூலித்து தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், இதற்கு முறையான வரைமுறையை தமிழக விவசாயத் துறை வகுக்க வேண்டும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com