மொபெட் மீது பேருந்து மோதல்: மூதாட்டி மரணம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தனது கணவருடன் மொபெட்டில் சென்ற மூதாட்டி தனியாா் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், எறையானூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விநாயகம் (73). இவரது மனைவி முனியம்மாள் (70). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் மொபெட்டில் சென்றுகொண்டிருந்தனா். மொபெட்டை விநாயகம் ஓட்டினாா்.
அப்போது, இவா்களது மொபெட் மீது அந்தப் பகுதியில் வந்த தனியாா் பேருந்து மோதியது. இதில், விநாயகம், முனியம்மாள் ஆகிய இருவரும் காயமடைந்தனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த முனியம்மாள் உயிரிழந்தாா். விநாயகம் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
