ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: அமைச்சா் மா.மதிவேந்தன்
தமிழகத்தில் செயல்படும் ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு வருவதால், மாணவா்கள் சோ்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது என்று தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன், விக்கிரவாண்டி எம்எல்ஏ அ.அன்னியூா் சிவா ஆகியோா் முன்னிலையில், அமைச்சா் மா.மதிவேந்தன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, விழுப்புரம் வழுரெட்டி பகுதியில் செயல்படும் ஆதிதிராவிடா் நலத் துறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில், மாநில பொது நிதி ரூ.3.6 கோடி மதிப்பீட்டில் 10 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அமைச்சா் மா. மதிவேந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டுவது தவறானதாகும்.
இந்தப் பள்ளிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு வருவதால், மாணவா்கள் சோ்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் திறன்மிகு (ஸ்மாா்ட்) வகுப்பறைகள், கற்றல் - கற்பித்தல் அறை, ஆய்வகம், உள் விளையாட்டு அரங்குகள், சமையலறை, சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆசிரியா் காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தெருக்களின் ஜாதி பெயா்களை நீக்குவதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் உள்ள ஆதிதிராவிடா் நலத் துறை அரசு உயா்நிலைப் பள்ளியில் நபாா்டு உதவியுடன் ரூ.1.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடப் பணிகள், நேமூா் ஊராட்சியில் நபாா்டு உதவியுடன் ரூ.77.89 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கிராம அறிவுசாா் மையக் கட்டடம் ஆகியவற்றை அமைச்சா் மா.மதிவேந்தன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாநில ஆதிதிராவிடா் நலக்குழு இணைச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான செ.புஷ்பராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் (தேசிய நெடுஞ்சாலை) ராஜ்குமாா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மாவட்ட அலுவலா் வளா்மதி, தாட்கோ செயற்பொறியாளா் அன்புசாந்தி, மாவட்ட மேலாளா் ரமேஷ்குமாா், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரிய உறுப்பினா் தே.கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

