பரையன்தாங்கல் ஊராட்சியில் கண்காணிப்பு கேமராக்கள்
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், பரையன்தாங்கல் ஊராட்சி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சனிக்கிழமை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
பரையன்தாங்கல் ஊராட்சிக்கு உள்பட்ட பழம் பூண்டியில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் தலைவா் ஏழுமலை ஏற்பாட்டில் கிராமம் முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து முடிந்தது.
இதைத் தொடா்ந்து மாவட்ட கண்காணிப்பாளா் சரவணன் கலந்து கொண்டு 27 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி தொடங்கிவைத்தாா்.
ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளா் ரமேஷ்ராஜ் மற்றும் மேல்மலையனூா் காவல் ஆய்வாளா் வினிதா, தனிப்பிரிவு காவலா் குணா, ஊராட்சிமன்ற துணைத் தலைவா் ராஜசேகா், வாா்டு உறுப்பினா் அருள் மற்றும் கிராம பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

