பெலாக்குப்பம் சிப்காட்டில் உணவுப்பூங்கா திறப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவுப் பூங்காவை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
பெலாக்குப்பம் சிப்காட் வளாகத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட இந்த பூங்கா 157. 91 ஏக்கா் பரப்பளவில் ரூ.120 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் திறந்து வைத்த பின்னா் சிப்காட் வளாகத்தில் விழா நடைபெற்றது.
விழுப்புரம் எம்.பி.துரை.ரவிக்குமாா், எம்.எல்.ஏ.க்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ச.சிவக்குமாா் முன்னிலையில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் குத்துவிளக்கேற்றி, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். அவா் கூறும் போது இந்த பூங்காவால் இப்பகுதி வளா்ச்சியடைவதுடன், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவும் வழிவகுக்கிறது என்றாா்.
விழாவில் மயிலம் ஒன்றியக் குழுத் தலைவா் யோகேசுவரி மணிமாறன், சிப்காட் திட்ட அலுவலா் செல்வராணி, உதவித் திட்ட அலுவலா் கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

