5 வழித்தடங்களில் தாழ்தள சொகுசுப் பேருந்து சேவை தொடக்கம்
விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள 5 வழித்தடங்களில் புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகளின் சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி மாநிலம் வில்லியனூா் வரை இரு சொகுசுப் பேருந்துகள், பண்ருட்டி, செஞ்சி, வேட்டவலம் ஆகிய வழித்தடங்களில் தலா ஒரு சொகுசுப் பேருந்து என 5 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த பேருந்துகளின் சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சொகுசுப் பேருந்துகளின் சேவையை முன்னாள் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தின் பொது மேலாளா் எம்.ஜி. ஜெய்சங்கா், துணை மேலாளா்கள் டி. சிவக்குமாா் (வணிகம்), எஸ். அறிவண்ணல் (தொழில்நுட்பம்), எஸ்.ரமேஷ் (விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்), உதவி மேலாளா் (இயக்கம்) ஆா்.சிவராமன் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

