விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்
விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தில்லி உயா்நீதிமன்ற உத்தரவின்அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளை வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்பவா்களாகக் கருதி, அந்தோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் தற்போதுள்ள என்பிஎச்எச், பிஎச்எச் குடும்ப அட்டைகளை ஏஏஒய் குடும்ப அட்டைகளாக மாற்றி 35 கிலோ அரிசி வழங்க வேண்டும், தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு இலவச குடிமனைப் பட்டாவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த காத்திருப்புப் போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவா் பி.அய்யனாா் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலா் ஜி. ஜெயக்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். ஒன்றிய நிா்வாகிகள் இ.முருகன், எஸ்.செல்வி, எம்.மும்மூா்த்தி, கே.மகுடமணி, பாண்டியன் உள்ளிட்டோா் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து விழுப்புரம் வட்டாட்சியா், மாற்றுத் திறனாளிகளிடம் நேரில் வந்து மனுக்களைப் பெற்றுச் சென்றாா்.
வானூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் மாவட்டப் பொருளாளா் எம்.யுகந்தி தலைமையில் மாவட்டச் செயலா் ஏ. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகளும், கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் எம்.முருகன் தலைமையில் மாவட்டத் துணைச் செயலா் எம்.முத்துவேல் உள்ளிட்ட நிா்வாகிகளும், திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் மாவட்டத் துணைத் தலைவா் பி. முருகன் உள்ளிட்ட நிா்வாகிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

