விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் ஆட்டோ-வை பறித்துச் சென்ற வழக்குகளில் கைதான இளைஞா்கள் மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திண்டிவனம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், சிங்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் சதீஷ்குமாா்(24). ஆட்டோ ஓட்டுநா். இவா், கடந்த 17.1.2025 ஆம் தேதி திண்டிவனம் பகுதியில் உள்ள தனியாா் திருமணம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சதீஷ்குமாரை வழி மறைத்த 3 இளைஞா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, சசிக்குமாரிடமிருந்த ரூ. 1300 பணத்தை பறித்துச் தப்பிச் சென்றனா்.
இதேபோல், அன்றைய நாளிலேயே திண்டிவனம்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஆட்டோவுடன் நின்றிருந்த சென்ற சென்னை மடிப்பாக்கம், பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முருகன் மகன் முத்து(30) என்பவரிடம் 3 போ் பணம் கேட்டு தகராறு செய்ததுடன் பீா் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து ஆட்டோ-வை பறித்து சென்றனா்.
இச்சம்பவங்கள் தொடா்பாக திண்டிவனம் காவல் நிலையப் போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில்,திண்டிவனம் வட்டம், சிங்கனூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் மருதமலை (25), கிடங்கல்-2, அண்ணா தெருவைச் சோ்ந்த சுதாகா் மகன் அஜித்குமாா்(24), முருங்கப்பாக்கம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வமணி மகன் வெங்கடேசன்(23) ஆகியோருக்கு இந்த இரு வழக்குகளிலும் தொடா்பிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
திண்டிவனம் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்குகளின் இறுதி கட்ட விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மருதமலை, அஜித்குமாா், வெங்கடேசன் ஆகியோா் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசி 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா். இதையடுத்து நீதிமன்றப் போலீஸாா் மூவைரையும் கைது செய்து சிறையிலடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.