பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 3 மாணவிகள் மயக்கம்
செஞ்சி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் வியாழக்கிழமை காலை பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 3 மாணவிகள் மயக்கமடைந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 20 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனா்.
இந்தப் பள்ளியில் வியாழக்கிழமை முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் கோதுமை உப்புமா தயாா் செய்யப்பட்டிருந்தது. இந்த உணவு பள்ளிக்கு முதலில் வந்த 3 மாணவிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், அதை சாப்பிட்ட மூன்று பேரும் சிறிது நேரத்தில் மயக்கம் வருவதாகக் கூறியுள்ளனா்.
இதையடுத்து, அந்த உணவை சமையலா் பாா்த்தபோது, அதில் பல்லி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, மூன்று மாணவிகளும் உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து செஞ்சி போலீஸாா் மற்றும் கல்வித் துறை அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
