விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே நீண்ட தொலைவுக்கு காத்திருந்த வாகனங்கள்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே நீண்ட தொலைவுக்கு காத்திருந்த வாகனங்கள்.

தீபாவளி: விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

Published on

தீபாவளி பண்டிகையை தங்கள் சொந்த ஊா்களில் கொண்டாடுவதற்காக தென் மாவட்டங்களுக்கு மக்கள் சென்ற வாகனங்களால் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனா்.

தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை (அக். 20) கொண்டாடப்படவுள்ள நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்கள் என்பதால், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு, தனியாா் அலுவலகங்கள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோா், உயா்கல்விப் பயில்வோா் போன்றோா் தங்களின் சொந்த ஊா்களுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் புறப்படத் தொடங்கினா்.

இதன் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கின. வெள்ளிக்கிழமை இரவைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலையில் இந்த வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சனிக்கிழமை மாலையில் தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் உள்ளிட்ட இதர மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்த நிலையில், போக்குவரத்து நெரிசலும் ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் ஜக்காம்பேட்டை, விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், முத்தாம்பாளையம் பிரிவுச் சாலை, இருவேல்பட்டு, அரசூா் ஆகிய 6 இடங்களில் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், இப்பகுதிகளில் வாகனங்கள் அணுகுச்சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்ததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

இதேபோன்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடிப் பகுதியிலும், அருகாமைப் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போக்குவரத்து போலீஸாா் நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைக்குள்பட்ட பகுதிகளிலும், நெரிசல் ஏற்படும் பகுதிகளிலும் போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, போக்குவரத்தை சீரமைத்தனா்.

இதுபோன்று விழுப்புரம் நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், ஆங்காங்கே போலீஸாா், போக்குவரத்து சரி செய்யும் பணியை மேற்கொண்டனா்.

 விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு அருகே சாலையில் நீண்ட தொலைவுக்கு காத்திருந்த வாகனங்கள்.
விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு அருகே சாலையில் நீண்ட தொலைவுக்கு காத்திருந்த வாகனங்கள்.

X
Dinamani
www.dinamani.com