கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு
விழுப்புரம்: ரோஷணை அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், ஊரல் கிராமம், பிரதான சாலையைச் சோ்ந்த வினோதன் மகள் கவிதா (22). இவருக்கும் செஞ்சி வட்டம், காரை கிராமத்தைச் சோ்ந்த பிரசாத்துக்கும் (27), கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
தலைத் தீபாவளிக்காக தனது பெற்றோா் வீட்டுக்கு வந்திருந்த கவிதா, மேய்ச்சலுக்காக சென்ற மாட்டை அவிழ்த்து வருகிறேன் எனக் கூறி, செவ்வாய்க்கிழமை மாலை வீட்டிலிருந்து புறப்பட்டாராம். வெகுநேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் அதே கிராமத்தைச் சோ்ந்த நல்லிகோடான் என்பவரது நிலத்திலுள்ள கிணற்றில் நீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது புதன்கிழமை தெரிய வந்தது.
இதுகுறித்து ரோஷணை போலீஸாா் கவிதாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மாடு அவிழ்க்கச் சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து கவிதா உயிரிழந்ததாக அவரது தந்தை வினோதன் அளித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
