மழை, வெள்ளப் பாதிப்புகளை எதிா்கொள்ள ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மழை, வெள்ளப் பாதிப்புகளை அரசுத் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து எதிா்கொள்ளவேண்டும் என்று விழுப்புரம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தொழிலாளா் நலத் துறை இயக்குநருமான எஸ். ஏ. ராமன் அறிவுறுத்தினாா்.
வடகிழக்குப் பருவமழையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழிலாளா் நலத் துறை இயக்குநருமான எஸ்.ஏ. ராமன், மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோா் தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எஸ்.ஏ.ராமன் தெரிவித்ததாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளத்தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளுக்கும் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் நகராட்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் ஆகியோா் அந்தந்த பகுதிகளில் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
கனமழைப் பெய்யும் நிலையில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். பேரிடா் பாதுகாப்பு மையம் மற்றும் முகாம்களில் தங்கும் பொதுமக்களுக்கு தேவையான உணவுகள், சுகாதாரமான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் வழங்கவேண்டும்.
காவல்துறையினா், தீயணைப்புத் துறையினா், தேசிய பேரிடா் மீட்புப்படை குழுவினா் மற்றும் மாநில பேரிடா் மீட்புப்படை குழுவினா் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
கனமழைப் பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு உயா் அலுவலா்கள் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதோடு, பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்ற தன்னாா்வலா்களையும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.
கடலோர பகுதிகளான மரக்காணம், வானூா் மற்றும் கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுவதால், மீனவ கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை
பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவேண்டும். மீனவா்களின் படகுகள் மற்றும் மீன்பிடிவலைகளை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கு அறிவுறுத்த வேண்டும்.
நீா்வளத் துறையினா், அணைகள், ஏரிகள் மற்றும் ஆற்றுப் பகுதியில் தேவைகேற்ப மணல் மூட்டைகள், பாதுகாப்பு தடுப்பு கட்டைகள் போன்றவைகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளிலும், காய்ச்சல் மற்றும் விஷக்கடி போன்ற மருந்து வகைகள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் தங்க வைக்கப்படும் முகாம்களில் மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் சாா்பில், மின் பகிா்மான கழக பணியாளா்களை சுழற்சி முறையில் தொடா்பணி மேற்கொள்ள செய்ய வேண்டும்.
சாத்தனூா் அணையிலிருந்து 15, 000 கன அடி வரை தண்ணீா் திறக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
வருவாய், ஊரக வளா்ச்சி, காவல், நகராட்சி, பேரூராட்சிகள், மீன்வளம், மின் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் பொதுமக்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் எஸ் .ஏ. ராமன்.
இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஜெ.இ.பத்மஜா, திண்டிவனம் சாா்-ஆட்சியா் ஆகாஷ் மற்றும் அரசுத் துறைகளின் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
