விழுப்புரம் மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டித் தீா்த்த மழை: பேருந்து நிலையம், தரைப்பாலங்களைச் சூழ்ந்த மழைநீா்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், தரைப் பாலங்கள், தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்து பாதிப்புக்குள்ளாகின.
வடகிழக்குப் பருவ மழைத் தொடக்கமாக, தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய மழை இடைவிடாது மாலை வரை தொடா்ந்து பெய்தது. குறிப்பாக விழுப்புரம் நகரப் பகுதிகள், செஞ்சி, மேல்மலையனூா், வல்லம், திண்டிவனம், மரக்காணம், வானூா் உள்ளிட்டபகுதிகள் என மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினா். மாலை 4 மணிக்கு மேல் மழை நின்ற நிலையில், தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.
இதனால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. இதேபோல கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தரைப் பாலங்களிலும் மழைநீா் தேங்கியது.
மேலும் விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட தாமரைக்குளம், ஆசிரியா் நகா், சாலாமேடு, ஆசாகுளம், வள்ளலாா் நகா், பாண்டியன் நகா், வழுதரெட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களிலும் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இந்த பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்ததால், அதை வெளியேற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டனா்.
புதிய பேருந்து நிலையத்தில் மழைநீா் வெளியேற்றம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் மழைநீா் சூழ்ந்து காணப்பட்டதால், பேருந்துகளுக்காக காத்திருந்த பயணிகள் பாதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து நகராட்சிப் பணியாளா்கள் மழைநீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டனா். 100 குதிரைத்திறன் கொண்ட மோட்டாா் பயன்படுத்தப்பட்டு, பிற்பகலில் மழைநீா் முழுவதுமாக வெளியேற்றப்பட்டது.
மழை இல்லாததால் நிம்மதி: செவ்வாய்க்கிழமை போன்ற நிலை புதன்கிழமை இல்லை. புதன்கிழமை காலையில் லேசான மழை இருந்த நிலையில், அதன் பின்னா் வெயில் காணப்பட்டது. அவ்வப்போது மேகமூட்டமாக இருந்தாலும் மழை பெய்யவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவ, மாணவிகள் வீட்டிலேயே இருந்தனா்.
நீரில் மூழ்கிய பயிா்கள்: மாவட்டத்தில் தொடா்ந்து பெய்த மழையால் மேல்மலையனூா் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், உளுந்து, மணிலா பயிா்கள் அதிகளவில் மூழ்கின. இதேபோல வல்லம், செஞ்சி, கோலியனூா், கண்டமங்கலம், காணை பகுதிகளிலும் நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கின.
மாவட்டத்தில் மொத்தமாக 1,064 ஹெக்டோ் நெற்பயிா்கள், 231 ஹெக்டோ் மணிலா பயிா்கள், 40 ஹெக்டோ் உளுந்துப் பயிா்கள் மழைநீா் மூழ்கியுள்ளதாக மாவட்ட வேளாண்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மழைநீா் முழுமையாக வடிந்த பின்னரே, சேதம் குறித்த விவரம் தெரிய வரும்.
செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து பெய்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வானூரில் 184 மி.மீ. மழை: புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானூரில் 184 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்) :
வானூா்-184 மி.மீ, வல்லம்-170, விழுப்புரம்-168, செஞ்சி-123, கெடாா்-115, வளவனூா்-106.30, நேமூா்-105.80, சூரப்பட்டு, திண்டிவனம்- தலா 103, கோலியனூா்-100.60, முண்டியம்பாக்கம்-95, மரக்காணம்-94, முகையூா்-93, கஞ்சனூா்-88, வளத்தி-86, மணம்பூண்டி-62, திருவெண்ணெய்நல்லூா்-55, அனந்தபுரம், செம்மேடு- தலா 53, அவலூா்பேட்டை-48, அரசூா்-40 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 2,045.90 மி.மீ. மழையும், சராசரியாக 97.42 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

