பறிமுதல் செய்யப்பட்ட  புகையிலைப் பொருள்களுடன், கைதானவா்கள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன், கைதானவா்கள்

177 கிலோ புகையிலைப் பொருள்கள், வாகனங்கள் பறிமுதல்: மூவா் கைது

திருவெண்ணெய்நல்லூா் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 177 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வாகனத்துடன் பறிமுதல் செய்தனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் காவல் ஆய்வாளா் அழகிரி, உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் ப.கொளத்தூா்-பூசாரிபாளையம் கூட்டு சாலையில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை செய்ததில், அவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், குன்னத்தூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன்(46) என்பதும், இவா் குட்கா புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பெங்களூருவிலிருந்து சரக்கு வாகனத்தில் கடத்திவருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வாகன சோதனையை தீவிரப்படுத்தினா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன.

பின்னா் அந்த வாகனத்தில் இருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆமூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணதாசன் (29, அன்ராயநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் (48) என்பதும், இவா்கள் முருகனுடன் சோ்ந்து பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து முருகன், கண்ணதாசன், சங்கா் ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான 177 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு சரக்கு வாகனம், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com