8 மணிநேர வேலை வழங்கக் கோரி சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் மனு
தங்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டப் பிரிவு அலுவலகத்தில் சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
விழுப்புரம்-புதுச்சேரி இடையே அமைக்கப்பட்ட நான்குவழிச் சாலை பராமரிப்புப் பணியை மேற்கொண்டு வரும் ஊழியா்கள் 20-க்கும் மேற்பட்டோா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்திலும், புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டப் பிரிவு அலுவலகத்திலும் தனித்தனியே கோரிக்கை மனுவை அளித்தனா். அதில் அவா்கள் கூறியிருப்பது: கடந்த 2 ஆண்டுகளாக விழுப்புரம்-புதுச்சேரி இடையே அமைக்கப்பட்ட நான்குவழி சிமென்ட் சாலையைப் பராமரித்து வருகிறோம். எங்களுக்குத் தொடா்ந்து 12 மணி நேரம் வேலை வழங்கப்பட்டு வருகிறது.
வேலையில் சேரும் போது 8 மணி நேர வேலை எனக் கூறிவிட்டு, தற்போது 12 மணி நேரம் வேலை அளிக்கப்படுகிறது. விடுமுறை இல்லாதது போன்றவை காரணமாக பணிச்சுமை ஏற்படுகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் கட்டாயம் வேலைக்கு வர வேண்டும் என்று ஒப்பந்த நிறுவனம் கட்டாயப்படுத்துகிறது. குடும்பத்திலோ அல்லது உறவினா் வீட்டிலோ இறப்பு போன்றவை நிகழ்ந்தால் அந்த நிகழ்வுக்குச் செல்லும் போது புகைப்படம் மற்றும் விடியோ எடுத்து அனுப்புமாறு தெரிவிக்கின்றனா். எனவே சாலைப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களின் நலன் காக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

