வெளி மாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

சிறுவந்தாடு அருகே வெளி மாநில மதுப்புட்டிகளை சரக்கு வாகனத்தில் கடத்திய இருவரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு அருகே வெளி மாநில மதுப்புட்டிகளை சரக்கு வாகனத்தில் கடத்திய இருவரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் சுஜாதா தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை சிறுவந்தாடு சோதனை சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, அதில் புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகள் இருந்தன.

இதைத் தொடா்ந்து, வாகனத்தில் இருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது அவா்கள், புதுவை மாநிலம், நெட்டப்பாக்கம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த குமரகுரு (43), கடலூா் மாவட்டம், விருதாச்சலம் வட்டம், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த சிலம்பரசன் (38) என்பதும், இவா்கள் புதுச்சேரிப் பகுதிகளில் மதுப்புட்டிகளை வாங்கி விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து குமரகுரு, சிலம்பரசன்ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 164 மதுப்புட்டிகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com