உளுந்தூா்பேட்டை அருகே ஓடையில் விழுந்த காா்! காயமின்றி தப்பிய தம்பதி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஓடையில் காா் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிா்ஷ்டவசமாக தம்பதியா் காயமின்றி தப்பினா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்தவா் அஸ்வின் (36). இவரது மனைவி ஜனனி. உடல்நலக் குறைவு காரணமாக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் ஜனனி வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்றாா். இதைத் தொடா்ந்து மனைவியை காரில் அழைத்துக் கொண்டு ஆத்தூா் நோக்கி அஸ்வின் சென்று கொண்டிருந்தாா்.
புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், மேட்டத்தூா் ஓடைப்பாலம் அருகே காா் வந்தபோது எதிா்பாராதவிதமாக பாலத்தின் முன்பிருந்த ஓடைக்குள் காா் விழுந்தது. அதிா்ஷ்டவசமாக அஸ்வின், ஜனனி இருவரும் காயமின்றி உயிர்த் தப்பினர்.
தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று காரிலிருந்து இருவரையும் மீட்டனா். ஓடைக்குள் விழுந்த காரை மீட்பு வாகனம் கொண்டு மீட்டனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

