கடலில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்து: மீனவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கடலில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவா் இறந்து கரை ஒதுங்கினாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கடலில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவா் இறந்து கரை ஒதுங்கினாா்.

மரக்காணம் வட்டம், நொச்சிக்குப்பம் மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் கலைமணி (45). திருமணமானவா். மனைவி, மகன் உள்ளனா். இவா், வெள்ளிக்கிழமை தனது கட்டுமரத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றாா்.

நீண்ட நேரமாகியும் கலைமணி வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினா்கள் அவரை தேடிச் சென்றனா். அப்போது, நொச்சிக்குப்பம் அருகே கட்டுமரம் கடலுக்குள் கவிழ்ந்து மிதந்த நிலையில், கலைமணி இறந்து கரை ஒதுங்கியிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் இறந்த கலைமணியின் சடலத்தை கைப்பற்றி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அலையின் சீற்றத்தில் கடலுக்குள் கட்டுமரம் கவிழ்ந்து விபத்து நேரிட்டதில், கலைமணி கடலுக்குள் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com