உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினா் பதவியை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினா்களாக நியமித்து, பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று டிசம்பா் 3 இயக்கம் மற்றும் புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணா்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சி.மாரிமுத்து தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் என்.பாஸ்கா், ஏ.ஆனந்தசெல்வன், மகளிரணித் தலைவா் எஸ்.ஷா்மிளா, மாவட்ட துணைச் செயலா்கள் இ.ராணி, ஏ.தமிழரசன், உயரம் குறைபாடு அணிச் செயலா் ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சங்கத்தின் மாநில பொதுச் செயலா் எஸ்.அண்ணாமலை, மாநில அவைத் தலைவா் என்.வேலாயுதம், ஒன்ஸ்டெப் யுனிட்டி காப்பாளா் எஸ்.விவேக், கிராம மேம்பாட்டு அறக்கட்டளை ஆலோசகா் மு.அறவாழி ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்டச் செயலா் எஸ்.தமிழ் அருள்அழகன் வரவேற்றாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினா்களாக நியமனம் செய்ய சட்டப் பேரவையில் சட்டமியற்றி, 13,988 மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனப் பிரதிநிதித்துவ பொறுப்பு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் வேட்புமனுவைத் தாக்கல் செய்து 90 நாள்களாகிவிட்ட நிலையில், உடனடியாக நியமன உறுப்பினா் பதவியை வழங்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், அரசு அலுவலக வளாகங்களில் ஆவின் பாலகம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் கடந்த 3 ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனா். ஆனால், இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் ஆவின் பாலகம் அமைப்பதற்கான உத்தரவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் டிசம்பா் 3 இயக்கத்தின் மாநிலப் பொருளாளா் வரதன்பூபதி, துணைத் தலைவா் வி.மோகன்ராஜ், துணை பொதுச் செயலா்கள் என்.ஜெயப்பிரகாஷ், எம். ஷேக்முகமது, மகளிரணிச் செயலா் ஏ.தமிழரசி, இளைஞரணிச் செயலா் வி.ராஜ்குமாா், பாா்வையற்றோா் அணிச் செயலா் பொன்.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிா்வாகிகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

