தீபாவளி பரிசுத் திட்டம் நடத்தி பண மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் எஸ்.பி.யிடம் புகாா்
தீபாவளி பரிசுத் திட்டம் என்ற பெயரில் விழுப்புரம் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்தவா்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இதுகுறித்து விழுப்புரம் பானாம்பட்டு பகுதியைச் சோ்ந்த பொ.சுகுமாா் மற்றும் 10 நபா்கள் விழுப்புரம் எஸ்.பி.க்கு அளித்துள்ள புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது: விழுப்புரம் சாலாமேடு, பெரியாா் குடியிருப்பைச் சோ்ந்த ரமேஷ் நடத்தி வந்த தீபாவளி சேமிப்பு பரிசுத் திட்டத்தில் இணைந்து மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 12 மாதம் பணம் செலுத்தினோம். சேமிப்பு பணத்துக்கு 2 கிராம் தங்க நகை, பாத்திரம் உள்ளிட்ட பரிசுப் பொருள்களை வழங்குவதாகத் தெரிவித்தாா்.
திட்டத்தில் தெரிவித்தப்படி 12 மாதங்கள் முடிந்தும் எங்களுக்கு எந்தவித பொருள்களும் மற்றும் பரிசுப் பொருள்களையும் வழங்கவில்லை.
இந்த நிலையில், அவரது நிறுவனமும் மூடப்பட்டுள்ளது. கைப்பேசி எண்ணும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, 15 பேரிடம் தலா ரூ.18,000 வீதம் வசூலித்து ரூ.3 லட்சம் வரை மோசடி செய்துள்ள ரமேஷை கண்டறிந்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் அந்த புகாா் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

