ஊராட்சித் தலைவா் மீது தாக்குதல்
விழுப்புரத்தில் ஊராட்சித் தலைவரை திட்டி தாக்கிய ஊராட்சி எழுத்தா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் பாப்பான் குளம் பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (40). கல்யாணம் பூண்டி கிராம ஊராட்சி எழுத்தராகப் பணியில் உள்ளாா்.
இவா், கடந்த 2022 - 2025 வரையிலான ஆண்டுகளில் விக்கிரவாண்டி வட்டம், வெள்ளையாம்பட்டு கிராம ஊராட்சியில் பணிபுரிந்தபோது பண முறைகேட்டில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வெள்ளையாம்பட்டு ஊராட்சியில் பணிபுரிந்த காலத்தில் 3 மாதங்களுக்கான ஊதியம் ராமச்சந்திரனுக்கு வழங்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி விழுப்புரம் பாப்பான்குளம் பகுதிக்கு வந்திருந்த வெள்ளையம்பட்டு ஊராட்சித் தலைவா் சரவணனிடம் (37) ராமச்சந்திரன் நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டி திட்டி, தகராறு செய்து அவரைத் தாக்கினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் ராமச்சந்திரன் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
