Enable Javscript for better performance
விஸ்வரூபம் எடுப்பது- தமிழன் ஆட்சியா? தாலிபான் ஆட்சியா?- Dinamani

சுடச்சுட

  

  விஸ்வரூபம் எடுப்பது- தமிழன் ஆட்சியா? தாலிபான் ஆட்சியா?

  Published on : 31st January 2013 08:08 PM  |   அ+அ அ-   |    |  

  kamal_hasan_vishwaroopam

  வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால் நாம் கற்றுக் கொள்ளவும் இல்லை; நம்மால் மறந்துவிடவும் முடியவில்லை. அதே பிரச்னைதான் மீண்டும் மீண்டும் வருகிறது. படித்தவுடன் சோடா பாட்டில் போல் சீறுகிறோம். பின்னர் காலி பாட்டில் போல் அமிழ்ந்து விடுகிறோம்.

  ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் முஸ்லிம்களின் துணையின்றி விடுதலை வாங்க முடியாது என்ற நிலைபாட்டை அன்றைய தலைவர்கள் எடுத்தார்கள். அதன் விளைவு பல லட்சம் உயிர்கள் மடிந்தன. ஒரு தனி முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவானது. பாரதமே என் தாய் நாடு என்று முழக்கமிட்டு பெரும்பான முஸ்லிம்கள் களத்திற்கு வரவில்லை. ஹிந்துக்கள் தியாகம் செய்தனர். அவர்களைக் கொன்று குவித்து முஸ்லிம்கள் பாகிஸ்தானைப் பெற்றுச் சென்றனர்.

  இந்த நாட்டைக் கூறு போட வேண்டுமென்றால் என்னைக் கூறு போடுங்கள் என்று சொன்ன காந்திஜியும், பாகிஸ்தான் என்பது கற்பனைப் பிதற்றல் என்று சொன்ன ஜவஹர்லால் நேருவும், அவர்களால் வளர்க்கப்பட்ட மத நல்லிணக்கப் பேயின் முன் கூனிக்குறுகி நின்ற அவலம் வரலாற்றில் மறைக்கவும் மறுக்கவும் முடியாத ஒன்று.

  விடுதலைக்குப் பின்னும் வரலாற்றில் நாம் செய்த தவறைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

  அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்களின் அடிப்படைவாத எண்ணங்களை வளரவிட்டு அவர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தி ஆட்சிக் கட்டிலிலே அமர வேண்டுமென்ற நிலைப்பாட்டையே பெரும்பாலான அரசியல் கட்சிகளும் பின்பற்றின. இதன் விளைவாக தேசத்தின் ஒருமைப்பாட்டின் மீதும் பண்பாட்டின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களைத் தீவிரவாதிகள் என்று கட்டம் கட்டி ஒதுக்கும் செயலில் அரசியல் கட்சிகளும் மேற்கத்திய அடிவருடி அறிவுஜீவிகளும் இறங்கினர்.

  இன்று சர்ச்சைக்குள்ளான விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசனும் அவருக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவை தங்கள் வாழ்க்கை லட்சியம் என்றே பல கூட்டங்களிலும் பேட்டிகளிலும் கட்டுரைகளிலும் மார்தட்டி பறைசாற்றியவர்கள். அடிப்படை ஆதாரமின்றி கொச்சைப் படுத்துவதை நியாயமா என்று கேட்டால், கருத்துச் சுதந்திரம் என்று கொக்கரித்தவர்கள் இன்று விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் அடாவடித்தனம் செய்யும்போது, கமலஹாசனுக்கு மத நல்லிணக்கவாதி என்று சான்றிதழ் வழங்கிய கருணாநிதி, அவர்களுடன் கமலஹாசன் பிரச்னையைப் பேசித் தீர்க்க வேண்டும் என்று கருத்துச் சுதந்திரத்திற்குப் புது விளக்கம் தந்துள்ளார்.

  ஹிந்து என்றால் திருடன், ராமன் எந்த பொறியியற் கல்லூரியில் படித்தான், ராமன் குடிகாரன், தீ மிதிப்பது காட்டுமிராண்டித்தனம், பொட்டு வைப்பது மூடநம்பிக்கை என்றெல்லாம் ஹிந்துக்களை இழித்தும் பழித்தும் பேசியபோது ஹிந்துக்களின் மனம் புண்படுவதை எண்ண்ணிப் பார்த்தாரா? அந்த எண்ணத்தில் என்றாவது ஒருநாளாவது ஹிந்துக்களிடம் பேச்சு வார்த்தைக்கு வந்தாரா?

  ஹிந்துக்களை அவமானப்படுத்தும் கருத்துக்களை கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலே ஹார்மனி இந்தியா என்ற அமைப்பின் மூலம் விஷமாகக் கக்கிய கமலஹாசனுக்கு ஆதரவாக இன்று ஹார்மனி இந்தியாவின் தலைவர் ஆற்காட்டு நவாப் வீதிக்கு வந்தாரா?

  இந்தத் தருணத்தில் ஆற்காடு நவாப் அவர்களின் மதநல்லிணக்கச் செயல் ஒன்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

  மார்ச்சு 6, 2008 அன்று, முகலாய ஔரங்கசீப் பற்றிய ஒரு கண்காட்சியை FACT-India என்ற அமைப்பு சென்னையில் நடத்தியது. பாரதத்தின் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்திக் கொலை, கொள்ளை, கோவில்கள் அழிப்பு போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட முகலாய அவுரங்கசீப்பின் செயல்களைச் சித்தரிக்கும் விதமாக அந்தக் கண்காட்சி அமைந்திருந்தது. இதே கமலஹாசன் சார்ந்திருக்கும் அமைப்பான ஹார்மனி இந்தியாவின் தலைவர் ஆற்காடு நவாப் துண்டுதலினால் வரலாற்று ஆவணங்கள் கொண்ட அந்தக் கண்காட்சி காவல்துறையின் உதவியுடன் மூடப்பட்டது. ஒரு வரலாற்றுக் கண்காட்சியைக்கூட தமிழகத்தில் நடத்த முடியாமல் செய்வோம் என்று சாதித்துக் காட்டிய இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு இதே காவல்துறையும் கமலஹாசனும் துணை போனார்கள். இன்று அதே அடிப்படைவாதம் விஸ்வரூபம் எடுத்து கமலஹாசன் படத்தை விழுங்கிவிட்டது. கருத்துச் சுதந்திரம் அன்று போல் இன்றும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

  இதில் கொடுமை என்னவென்றால் ”புதிய தலைமுறை” தொலைக்காட்சிக்கு விஸ்வரூபம் திரைப்பட எதிர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த கமலஹாசன், “இல்லாத ஒரு விநாயகர் சதுர்த்தி.. அதைப் பெரிதாக கொண்டாடி ஒரு பூதாகரமான ஃபெஸ்டிவல் (திருவிழா) ஆக IPL/CCL போல இருக்கிறது. அந்த விழாக்களைப் பார்க்கும்போது ஒரு பதட்டம் ஏற்படுகிறது” என்று தன்னுடன் மல்லுக்கட்டும் முஸ்லிம் அடிப்படைவாதிகளைத் திருப்திப்படுத்த ஔவை தந்த விநாயகர் அகவல் கண்ட ஹிந்துக் கடவுளைக் கொச்சை படுத்தியுள்ளார்.

  முஸ்லிம்கள் வேறு; முஸ்லிம் அடிப்படைவாதிகள் வேறு என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குச் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள திமுக அரசு எந்த அளவிற்குச் சுதந்திரம் கொடுத்ததோ, அதே அளவிற்கு அதிமுக அரசும் தற்போது சுதந்திரம் கொடுத்து வருகின்றது.

  தமிழகத்தில் அடுக்கடுக்காக முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்ட சட்ட மீறல்களை அரசாங்கம் வேடிக்கை பார்த்ததனால், இன்று ’விஸ்வரூபம்’ தமிழகத்தில் ஓடாது என்ற சுவரொட்டி விஸ்வரூபம் திரையரங்குகளில் ஓடத் தகுதி பெற்றது என்ற மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் சான்றிதழைவிட வலிமை பெற்றதாகிவிட்டது.

  அமெரிக்காவில் முகம்மது நபியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ”முஸ்லிம்களின் அப்பாவித்தனம்” (Innocence of Muslims) என்கிற திரைப்படம் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்திவிட்டது என்று, அந்தத் திரைப்படம் நம் நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சாக்கில் அமெரிக்க துதரகத்தின் முன் 15 செப்டம்பர் 2012 அன்று போரட்டத்தில் இறங்கினர் முஸ்லிம் இயக்கங்கள். அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்; தமிழக அரசும் அனுமதித்தது. தூதரகத்தை மூடவும் செய்தார்கள். முற்றுகை இட்ட எந்த முஸ்லிம் அமைப்பையோ, தாக்குதல் நடத்திய முஸ்லிம் அமைபுகளின் மீதோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த அரசு.

  அந்தப் போராட்டம் அமெரிக்க தூதரகத்திலிருந்து அண்ணா சாலை முழுவதற்கும் பரவியது. எந்தத் தொடர்பும் இல்லாமல் லட்சக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகுமாறு, பலமணி நேரம் சென்னையின் உயிர்நாடியான அண்ணா சாலையை ஸ்தம்பிக்கச் செய்தனர். வாகனங்களை அடித்து நொறுக்கினர். போலிஸார் தாக்கப்பட்டனர். அண்ணா சாலையிலேயே நமாஸ் நடத்தப்பட்டது. காவல்துறை வேடிக்கை பார்த்தது. சென்னை காவல்துறை ஆணையர் பலிகடாவாக்கப்பட்டு பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் எந்த அடாவடி முஸ்லிமும் கைது செய்யப்படவில்லை.

  சென்னையில் 19 டிசம்பர் 2012 அன்று தமிழகத்தின் தவப்புதல்வர்களில் ஒருவரான வடலூர் ரமலிங்க வள்ளலார் அவர்களைக் கொச்சைப்படுத்தி முஸ்லிம்கள் (தமிழ்நாடு தௌஹித் ஜமாத்) துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர். இதை எதிர்த்து புகார் செய்த ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆட்சேபகரமான கருத்துக்களை அள்ளிவீசிய முஸ்லிம்கள் மீது எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை.

  அவுரங்கசீப் கண்காட்சியை முஸ்லிம் அடிப்படைவாதிகள் எதிர்த்து மூடியவுடன் கருத்துச் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தால் இன்று விஸ்வரூபம் வீணாகப் போயிருக்குமா? வெளிநாட்டிலிருந்து கொள்ளை அடிக்க வந்த அவுரங்கசீபை வரலாற்றின் ஒரு அங்கமாகப் பார்க்காமல் உலகம் தழுவிய இஸ்லாமின் ரத்த உறவாகப் பார்த்து இஸ்லாமியர்கள் ஒரு தனி இனம் என்பதை அவர்கள் நிலைநாட்டியபோது கண்டுகொள்ளாமல் விட்டதால், அது இன்று விஸ்வரூபமாகப் பிரிவினை வாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் உரிமத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டது.

  விஸ்வரூபம் திரைப்படத்தில் காட்டப்படும் ஆஃப்கான் தீவிரவாதிகளையும் காஷ்மீர் தீவிரவாதிகளையும் தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொல்ல வேண்டும் என்கிற அளவிற்கு முஸ்லிம் அமைப்பினர் சிலர் தொலைக்காட்சிகளில் கருத்துத் தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நம் ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் அப்பாவிப் பொதுமக்களும் யார்? நம் நாட்டில் இருந்துகொண்டே நம் நாட்டிற்கு எதிராக ஆயுதம் ஏந்தி நாசகார செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொல்லும் அளவிற்குத் துணிச்சலை இவர்களுக்குக் கொடுத்தது யார்? இப்படிப் பேட்டி அளித்தவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, இந்தப் பேட்டியைக் கேட்டுவிட்டுத் திரைப்படத்தைத் தடை செய்தது என்றால், இங்கு நடப்பது தமிழன் அட்சியா அல்லது தாலிபான் ஆட்சியா?

   

  (குறிப்பு: இது இணைய தளத்தில் வெளியிடப்படும் பிரத்யேகக் கட்டுரை; கட்டுரையில் கூறப்படும் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல)

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp