மக்களவை 4ஆம் கட்டத் தேர்தல்: அஸ்ஸாமில் 72%, திரிபுராவில் 82% வாக்குப்பதிவு

மக்களவை 4ஆம் கட்டத் தேர்தலில் அஸ்ஸாமில் 72%, திரிபுராவில் 82%, சிக்கிமில் 71%, கோவாவில் 35% என்ற அளவில் வாக்குகள் பதிவாகின.

மக்களவை 4ஆம் கட்டத் தேர்தலில் அஸ்ஸாமில் 72%, திரிபுராவில் 82%, சிக்கிமில் 71%, கோவாவில் 35% என்ற அளவில் வாக்குகள் பதிவாகின.

அஸ்ஸாமில் மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. முதல்கட்டமாக 5 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக கர்பி ஆங்லாங் மாவட்டம், கரீம்கஞ்ச், சில்ச்சார் ஆகிய 3 தொகுதிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 3,698 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் கர்பி ஆங்லாங் மக்கள் விடுதலை அமைப்பினர் பந்த் நடத்தியபோதும் மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இந்த 3 தொகுதிகளில் 15,26,082 பெண் வாக்காளர்கள் உள்பட 29,26,762 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவற்றில் பதற்றமானவையாக கருதப்பட்ட 209 வாக்குச்சாவடிகளும் அடங்கும். தேர்தலின்போது 37 வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதையடுத்து மாற்று இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. வாக்குச்சாவடிக்குள் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிபொருள்கள், ஏ.கே.56 ரக துப்பாக்கி உள்ளிட்டவை சமா ஹசோவா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைப்பற்றியதாக போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்தகட்டமாக எஞ்சியுள்ள 6 தொகுதிகளுக்கு இம்மாதம் 24ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

திரிபுரா: திரிபுராவில் 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. திரிபுரா மேற்குத் தொகுதிக்கு தேர்தல் முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக கிழக்குத் தொகுதிக்கு சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. 12 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தொகுதியில் 1,490 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 5,58,268 பெண் வாக்காளர்கள் உள்பட 11,38,765 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

சிக்கிம்: இந்த மாநிலத்தில் உள்ள ஒரே மக்களவைத் தொகுதிக்கும், 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 வேட்பாளர்கள் மக்களவைத் தேர்தலுக்கும், 121 பேர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் போட்டியிடுகின்றனர்.

இதற்காக 538 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1,79,650 பெண் வாக்காளர்கள் உள்பட 3,70,731 பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.

"சங்கா' சட்டப்பேரவைத் தொகுதியில் பெளத்த பிட்சுக்கள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் 2,904 துறவிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

கோவா: வடக்கு மற்றும் தெற்கு என இரு தொகுதிகள் கோவாவில் உள்ளன. அவற்றில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5,32,469 பெண் வாக்காளர்கள் உள்பட 10,60,777 வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக 1,151 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

"காங்கிரஸால் இடையூறு': பனாஜியில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறுகையில், ""பாஜக தலைமையிலான அரசுக்கு ஆதரவான அலை வீசுவதால் இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு மோடி முக்கிய காரணியாக விளங்குகிறார். அதனாலேயே கட்சியின் பங்கு மற்றும் பிற காரணிகள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்று அர்த்தமில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, எங்கள் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்த தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது'' என்றார்.

"வெற்றி உறுதி': காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜான் பெர்னாண்டஸ் கூறுகையில், ""பாஜக அரசின் மீதுள்ள அதிருப்தியால், மக்கள் பெரும் திரளாக வந்து வாக்களித்துள்ளனர். இதில் இருந்தே காங்கிரஸýக்கு அவர்கள் வாக்களித்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே நாங்கள் இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com