Enable Javscript for better performance
இடதுசாரி-திரிணமூல் இடையே சிறிதளவே வாக்கு இடைவெளி- Dinamani

சுடச்சுட

    
    buddhadev

    இடதுசாரி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு இடையே சிறிதளவே வாக்கு இடைவெளி உள்ளதாக முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.

    இது குறித்து கொல்கத்தாவில் பி.டி.ஐ செய்தியாளரிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:

    கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால், இடதுசாரி கட்சிகளுக்கும், திரிணமூல் காங்கிரஸýக்கும் இடையே 30 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம் இருப்பதை அறியலாம். அந்த இடைவெளியும் குறைந்து வருகிறது.

    மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை அதிக இடங்களில் வெற்றி பெற முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். இந்தத் தேர்தலை எங்களுக்கு மிக முக்கியமானதாக கருதுகிறோம். இடதுசாரிகள் மட்டுமே மக்கள் நலனை காப்பதில் உத்தரவாதம் அளிக்கக்கூடியவர்கள்.

    மேற்கு வங்கத்தில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் (திரிணமூல்) பல்வேறு பிரச்னைகளை உருவாக்கியிருந்தனர். ஆனால், இந்த மக்களவைத் தேர்தலில் அவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க தீர்மானித்துள்ளோம்.

    கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்துள்ளோம். எங்களது தவறுகளால், ஆதரவாளர்கள் சிலரை இழந்ததால் தோல்வி நேரிட்டது. அவர்களிடம் வெளிப்படையாக எங்களது தவறுகளை தெரிவித்து சரிக்கட்டும் முயற்சியில் வெற்றி பெறுவோம்.

    புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் திரிணமூல் அரசு தோல்வியடைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சிறு முதலீடு கூட மாநிலத்துக்கு வரவில்லை.

    கல்வி, மருத்துவம், சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு என எந்த விதத்திலும் மக்கள் முன்னேற்றத்துக்கான எதையும் இந்த அரசு செய்யவில்லை.

    திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு பணி முடிந்து விடுகிறது. மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாக உள்ளது.

    மம்தாவை சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே பாராட்டியது ஏன்? பின்னர் தில்லி ராம்லீலா மைதான திரிணமூல் கூட்டத்தில் அவர் பங்கேற்காததற்கு காரணம் என்ன என்று புரியவில்லை.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சிறுபான்மையின தலைவர் அப்துர் ரஸாக் முல்லா வெளியேறியதால் எவ்விதப் பாதிப்பும் இல்லை. அதனால் கட்சிக்கு நன்மையே என்று புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai