Enable Javscript for better performance
ஏ.கே. அந்தோனியும், கேஜரிவாலும் பாகிஸ்தான் ஏஜெண்டுகள்: நரேந்திர மோடி தாக்கு- Dinamani

சுடச்சுட

  

  ஏ.கே. அந்தோனியும், கேஜரிவாலும் பாகிஸ்தான் ஏஜெண்டுகள்: நரேந்திர மோடி தாக்கு

  By dn  |   Published on : 27th March 2014 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  narendra_modi

  பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியும், ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலும் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

  ஜம்மு ஹிராநகரில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

  பாகிஸ்தானின் ஆயுதங்களாக 3 ஏ.கே.க்கள் உள்ளன. அதில் ஒன்று ஏ.கே. 47 ரக துப்பாக்கி. இரண்டாவது, நமது பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி. மூன்றாவது, அரவிந்த் கேஜரிவால் ஆவார்.

  இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டனர். அவர்களை பாகிஸ்தானியர்கள் கொலை செய்ததாக நமது ராணுவம் தெரிவித்தது. ஆனால் ஏ.கே. அந்தோனியோ, பாகிஸ்தான் ராணுவத்தின் உடையை அணிந்து வந்தவர்கள்தான், இந்த தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினார்.

  ஆம் ஆத்மி மீது சாடல்: ஆம் ஆத்மி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில் இந்தியப் பகுதியான காஷ்மீர், பாகிஸ்தானின் பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

  அந்த கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அவர்களின் அறிவிப்புகளை கேட்டு, பாகிஸ்தான் சந்தோஷத்தில் நடனமாடுகிறது.

  பாகிஸ்தானின் இந்த ஏஜெண்டுகள், இந்தியாவின் எதிரிகள் ஆவர். பாகிஸ்தானுக்காக அவர்கள் பேசி வருகின்றனர்.

  காஷ்மீர் பிரச்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆட்சியில், ஜம்மு காஷ்மீரில் மனிதநேயம், ஜனநாயகம், "காஷ்மீரியாத்' (தேசிய உணர்வு) என்ற கொள்கை பின்பற்றப்பட்டது.

  மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்ததும், அதே கொள்கை பின்பற்றப்படும்.

  வாஜ்பாய் ஆட்சி மேலும் 5 ஆண்டுகள் நீடித்திருந்தால், காஷ்மீரின் தோற்றமே மாறியிருக்கும். காஷ்மீரில் நிலவி வரும் பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.

  மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில், நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

  முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி "ஜெய் ஜவான், ஜெய் கிஸான்' (வாழ்க ராணுவ வீரர்கள், வாழ்க விவசாயிகள்) என்று முழக்கமிட்டார். அவரது முழக்கத்தை "மார் ஜவான், மார் கிஸான் ( ராணுவ வீரர் சாகட்டும், விவசாயிகள் சாகட்டும்) என்று காங்கிரஸ் கட்சி மாற்றி விட்டது.

  தங்களது 10 ஆண்டுகால ஆட்சி குறித்து 125 கோடி மக்களின் கேள்விகளுக்கு காங்கிரஸிடம் பதில்கள் இல்லை. இதனால் மதசார்பின்மை கோஷத்தை அக்கட்சி எழுப்பி வருகிறது.

  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என நான் தெரிவிக்கிறேன். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, மக்கள் பிரச்னை குறித்து பேசாமல் மதசார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. தீவிரவாதம் ஒழிக்கப்படும் என நான் கூறுகிறேன். ஆனால் காங்கிரúஸா, மதசார்பின்மை குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்கிறது.

  வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு இந்தியாவில் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்குப் பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. இந்தியாவை தங்களது தாய் நாடு என்று அழைக்கும் உரிமை அவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்றார் மோடி.

  முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் "பாரத் விஜய்' என்னும் பெயரில் நாடு முழுவதும் பாஜக சார்பில் நடைபெறவுள்ள 185 பொதுக் கூட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறை முன்னாள் ஐ.ஜி.

  ஃபரூக் கான், காஷ்மீர் எழுத்தாளர் காலித் ஜஹாங்கிர் மற்றும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சுரேஷ் மல்ஹோத்ரா ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai