Enable Javscript for better performance
பாஜகவின் \\\"பிரசார பலூன்\\\' இம்முறையும் வெடித்து விடும்- Dinamani

சுடச்சுட

    
    rahul

    ""2004ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தியா ஒளிர்கிறது என்ற பாஜகவின் பிரசாரத்தை போல், அக்கட்சியின் தற்போதைய பிரசார பலூனும் வெடித்து விடும்'' என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தில்லியில் புதன்கிழமை அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெயீயிட்டு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் சித்தாந்தம், இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிரானதாகும். இந்த சித்தாந்தத்தை வெல்ல, காங்கிரஸ் கட்சி உறுதியாக போராடும்.

    2004ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்துடன் பிரசாரம் செய்தது. இதன்மூலம் தேர்தலில் 350 இடங்களில் தங்களால் வெற்றி பெற முடியும் என அந்த கூட்டணி கூறிக் கொண்டது. ஆனால் தேர்தல் முடிவுகளோ, அதற்கு மாறாக இருந்தன. எனவே இந்தியா ஒளிர்கிறது என்ற பிரசார பலூன் வெடித்தது போல், இம்முறையும் பாஜகவின் பிரசார பலூன் வெடிக்கும்.

    தனிப்பட்ட முறையில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை நான் எதிர்க்கவில்லை. இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் அவரது சித்தாந்தத்தைதான் எதிர்க்கிறேன். மோடி பிரதமரானால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். அவரது கருத்துகளை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

    மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வியடையும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. கருத்துக்கணிப்புகள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது இல்லை.

    கடந்த 2004, 2009ஆம் ஆண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியடையும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதுபோல் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸýக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் 22 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

    இம்முறையும் கருத்துக் கணிப்புகள் பலிக்கப் போவதில்லை. தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார் ராகுல்காந்தி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai