Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தல் செலவு ரூ.5,000 கோடி- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலை நடத்த ரூ. 5,000 கோடி வரை செலவாகும் என்றும், ஒரு தொகுதிக்கு சுமார் ரூ. 10 கோடி அளவுக்கு செலவிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

    தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7 முதல் மே மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் செலவுத் தொகை ரூ.70 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளர் என்னிடம் வந்து தேர்தல் செலவுக்கு ரூ. 70 லட்சம் போதாது. அதை ரூ. 3 கோடியாக உயர்த்துங்கள் என்று கேட்டார். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு வேட்பாளரோ ரூ.100 கோடி வரை செலவு செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இந்தப் பண பலம்தான் அரசியலில் சம நிலையற்றத் தன்மையை உருவாக்கி வருகிறது. மேலும் குற்றங்கள் பெருகவும் காரணமாக அமைந்து விடுகிறது என்று அவர் கூறினார்.

    இணையதளம் மூலமாக மனு தாக்கல் செய்துள்ள 500 வேட்பாளர்கள்

    தேர்தல் ஆணையம் புதிதாக அறிமுகம் செய்த "இணையதளம் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்யும் திட்டம்' வரவேற்பை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இணையதளத்தின் மூலம், இதுவரை 500 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்பாளர்களின் சொத்து விவரங்களையும் அதில் அவர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ரூ.80 கோடி பறிமுதல்: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் இதுவரை நடத்திய சோதனையில் ஆந்திரத்தில் ரூ.49.85 கோடி, தமிழகத்தில் ரூ.11.32 கோடி, பஞ்சாபில் ரூ.1.26 கோடி உள்பட பல்வேறு மாநிலங்களில் ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai