Enable Javscript for better performance
தெரிந்தவை தெரியாதவர்களுக்கு...- Dinamani

சுடச்சுட

  

  தெரிந்தவை தெரியாதவர்களுக்கு...

  Published on : 12th November 2012 03:49 AM  |   அ+அ அ-   |    |  

  kk4

  பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே'' என்பதற்கு பலர் தவறாக அர்த்தம் கொள்கின்றனர். பணம் இருப்பவர் தனது வீட்டு விசேஷங்களில் வழங்கும் விருந்தில் சாப்பிடும் பந்தியில் (இலையில்) தனது செல்வச் செழிப்பைக் காண்பிப்பார் என்று அர்த்தம். குணம் குப்பையிலே என்றால் - குப்பை என்றால் தானியக் குவியல் என்று அர்த்தம். இன்றும்கூட தஞ்சைப் பகுதியில் நெற்குப்பை என்ற ஊர் உள்ளது. அறுவடை செய்த தானியங்களைக் குவித்து வைக்கும் இடத்துக்குக் குப்பை என்று பெயர். தன்னிடம் உதவி கேட்டு வருபவருக்கு அந்த தானியக் குவியலிலிருந்து எவ்வளவு எடுத்துக் கொடுக்கிறார் என்பதைப் பொருத்து அவருடைய குணம் தெரியவரும் என்பதாகும்.

   

   

  3-ஆம் வகுப்பில் ஆசிரியர் கணக்கு சொல்லித்தருகையில் கூட்டல் முறை தெரிய ஒரு கணக்கு சொன்னார். தாய் கடைக்குப் போய் முட்டை வாங்குவதாகவும் அப்பாவுக்கு 1, அம்மாவுக்கு 1, மகனுக்கு 1, மகளுக்கு 1 ஆக மொத்தம் எத்தனை முட்டைகள் வாங்க வேண்டும் என கேட்க, அனைவரும் அவரவர் சிலேட்டில் 4 என விடை எழுதினர். ஒருவன் மட்டும் அருகிலுள்ள சிலேட்டுகளைப் பார்த்தும் 3 என எழுதினான். "ஏன் தம்பி, பக்கத்திலே பார்த்தும் தப்பா எழுதியிருக்க?' என ஆசிரியர் கேட்க, அவன் "எனக்குத்தான் அப்பா இல்லையே அய்யா' எனச் சொன்னான். அந்த மாணவன்தான் பின்னாளில் கர்மவீரர் காமராஜர் எனப் போற்றப்படுபவரானார்.

   

   

  ஆபிரகாம் லிங்கன் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன். தனது திறமையினால் முன்னேறி அமெரிக்காவின் அதிபராகும் வாய்ப்பு பெற்றவர். அவர் தனது பதவியேற்பு விழா அன்று பதவியேற்று முடிந்தவுடன் அவையில் உள்ள பெரிய பிரபுக்களிடம் ஆசி பெற்றார். அப்போது ஒருவர் தனது காலணியைக் காண்பித்து, "இந்தக் காலணி உன் அப்பா தைத்துக் கொடுத்தது' என்று லிங்கனைக் கேலிசெய்யும் விதமாகக் கூறினார். அதற்கு லிங்கன் பெருந்தன்மையோடு, "அப்படியா, மிக்க மகிழ்ச்சி; இனிமேல் அதற்கு ஏதாவது பழுதுநீக்க வேண்டுமென்றால் சொல்லுங்கள், நான் செய்து தருகிறேன்' என்றார். அவரின் பெருந்தன்மையான பதிலால் தலைகுனிந்தார் அந்தப் பிரபு.

   

   

  நமது வாழ்வில் முக்கியமாகச் செய்ய வேண்டியது என பாரதி கேட்டுக் கொண்டது: படியுங்கள் நிறையப் படியுங்கள். குறிப்பாக கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகள் என்று சொன்னபோதுதான் "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை' என்றார்.

   

   

  தொழில் அதிபர் ஒருவர் தனது தொழில் நஷ்டம் காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வது என முடிவெடுத்தார். குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் சம்மதித்தனர். ஒவ்வொருவரும் பல யோசனைகள் சொன்னார்கள்.

  விஷம் குடித்து தற்கொலை செய்வது என்ற பேச்சு வந்தவுடன் விஷம் வீரியமின்றியும் கலப்படமாகவும் இருந்தால் இறப்பு சரியாக ஏற்படாது, யாராவது பிழைத்துக்கொண்டால் என்னாவது என்ற சிந்தனை வந்தது. எனவே, தூக்கில் தொங்குவது என்று சொன்னதற்கு ஒருவர், ஒருவேளை கயிறு அறுந்துவிட்டால் என்னாவது என்றார்.

  ரயில் தண்டவாளத்தில் அனைவரும் தலைவைத்து விட்டால் என்று யோசித்தபோது, யாராவது பார்த்து காப்பாற்றி விட்டாலோ அல்லது ரயிலை நிறுத்தி விட்டாலோ என்னாவது என்று கேட்கப்பட்டது.

  இப்படியே யோசனைகளும் நிராகரித்தலும் நடந்துகொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டுச் சிறுமி வந்தாள்.

  இவர்கள் ஏதோ தீவிரமாக பேசுவதைக் கண்டு என்ன விஷயம் எனக் கேட்டாள்.

  இவர்கள் எல்லாவற்றையும் சொல்ல, அவள் தீர்க்கமாகச் சொன்னாள், "சாவதற்கே இவ்வளவு வழிகள் இருக்கும்போது வாழ்வதற்கு ஒரு வழி கூட இருக்காதா?' என்று கேட்டாள். உடனே அனைவருக்கும் சுருக் என மனதில் வலித்தது. தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai