
போலி வாக்காளர்கள் பெயரை நீக்குவதற்காக திமுக சார்பில் கொடுத்துள்ள மென்பொருளை தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி வாக்காளர்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழக வாக்காளர் இறுதிப்பட்டியல் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் போலி வாக்காளர்கள் ஏராளமாக உள்ளனர். உண்மையான வாக்காளர்கள் பலர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் இறுதிப்பட்டியலில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெரனல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, மனுதாரர் தேவையில்லாத குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எல்லா அரசியல் கட்சியினரையும் முறைப்படி அழைத்து ஒவ்வொரு கட்டமாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டுள்ளது.
குறைபாடுகள் கண்டறியப்பட்ட இடங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் போராட்டம் காரணமாக, எல்லா மாவட்டங்களிலும் பூத் அதிகாரிகள் மற்றும் பூத் முகவர்களுக்கு இடையே நடத்தப்படும் கூட்டத்தை முழுமையாக நடத்த முடியவில்லை. தற்போதும் வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதும், நீக்குவதும் வேட்புமனு வாபஸ் பெறும் கடைசி தேதி வரை தொடரும். தேர்தல் அன்றும்கூட போலி வாக்காளர்கள் யாராவது வந்தால் அவர்களை கட்சி ஏஜெண்டுகள் பட்டியலை சரிபார்த்து தடுக்க முடியும் என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிட்டார். ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் ஒரே நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. வாக்களித்த பின்னர் வாக்காளர் கை விரலில் தேர்தல் அதிகாரிகள் அடையாள மை வைக்கின்றனர். ஆனால் தற்போது ஒரு ரசாயன திரவத்தை விரலில் தடவினால், அந்த அடையாளத்தை எளிதில் அழித்து விடலாம்.
எனவே தற்போது ஒரு மென்பொருள் ("சாப்ட்வேர்') வந்துள்ளது. இதைப் பயன்படுத்தினால், வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்கள் பெயரை நீக்கவும், பல தொகுதிகளில் இடம்பெற்றுள்ள ஒரே நபர்களின் பெயரை நீக்கவும் முடியும் என்று கூறி, அந்த மென்பொருளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் தலையிடும் உரிமை நீதிமன்றத்துக்கு கிடையாது. அதேபோல, தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு செயலையும் இந்த நீதிமன்றத்தால் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது.
தேர்தல் ஆணையம் என்பது தேர்தலை நேர்மையாக நடத்தும் தன்னிச்சையான அமைப்பு. தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையான செயல்பாடுகளில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. தேர்தல் ஆணையத்தைச் சோதிப்பது போன்ற வழக்குகளை ஊக்கப்படுத்த நாங்கள் விரும்பவில்லை.
சட்ட விதிமீறல் பெரிதாக இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடரவேண்டும். சிறு பிரச்னைகளுக்காக வழக்கு தொடரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறோம். மேலும், போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்ய மனுதாரர் தரப்பில் ஒரு மென்பொருள் தரப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கிறோம். இந்த மென்பொருள் போலி வாக்காளர்கள் பெயரை நீக்குவதற்கு உதவிகரமாக இருந்தால், இந்த மென்பொருளை தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.