பாமகவுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்: காடுவெட்டி ஜெ.குரு
By | Published On : 03rd April 2016 07:58 AM | Last Updated : 03rd April 2016 07:58 AM | அ+அ அ- |

தமிழகத்தை ஆட்சி செய்ய பாமகவுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என்றார் பாமக வன்னிய சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு.
திருக்கோவிலூரை அடுத்த செட்டித்தாங்கலில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவர் மேலும் பேசியது: தமிழகத்தில் மன்னராட்சிக் காலத்தில் பெரும்பாலான ஆறுகளில் அணைகள் கட்டப்பட்டது. அதற்குப் பின் காமராஜர் ஆட்சிக் காலத்தில் சில இடங்களில் அணைகள் கட்டப்பட்டது.
குறிப்பாக, தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையை பென்னிக்குயிக் கட்டினார். ஆனால், இதுபோன்று அணைகள் கட்டி நீராதாரத்தைப் பாதுகாக்க திமுகவும், அதிமுகவும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அண்டை மாநிலமான கேரளத்தில் இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் எந்தவொரு ஆறுகளிலும் மணல் எடுக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்டு வருகிறது. ஏன், கேரள மாநிலத்துக்கு தமிழகத்தில் இருந்துதான் மணல் கொண்டுச் செல்லப்படுகிறது.
காமராஜர், ராஜாஜி, பெரியார் போன்றோர்கள் மக்களை குடிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மக்களை குடிக்கச் சொல்கிறார்கள். மதுக்கடைகளை திறந்து வைத்து, மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை இவர்கள் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தேர்தலைப் பொறுத்தவரை திமுகவும், அதிமுகவும் ஊழல் செய்து சம்பாதித்து வைத்துள்ள பணத்தை மக்களுக்கு கொடுத்து வெற்றிபெற்று விடலாம் என நினைக்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டுமேதான் வாக்காளர்களுக்கு பணமும், இலவசப் பொருள்களும் வழங்கப்படுகின்றன.
இந்தநிலை மாறவேண்டுமானால் மக்கள் பணத்துக்கும், இலவசப் பொருள்களுக்கும் ஆசைப்பட்டு வாக்களிப்பதைத் தவிர்த்து, நாட்டின் நலனுக்காக நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இத்தேர்தலில் நாங்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம். ஏனெனில், எங்களிடம் பணமில்லை. ஆனால், நேர்மையான முறையில் தேர்தலை சந்திப்போம்.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகாலமாக ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகளுக்கு ஒரு மாற்றாக பாமகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஐந்தே ஐந்து ஆண்டுகாலம் மட்டும் வாய்ப்பு கொடுங்கள். 50 ஆண்டுகளுக்கான நல்லாட்சியை நாங்கள் செய்வோம்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும், தில்லியில் கெஜ்ரிவாலுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டதைபோல, தமிழகத்தில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றார். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ரிஷிவந்தியம் மு.அமுதமொழி உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.