Enable Javscript for better performance
அனைத்து தொகுதிகளும் என் தொகுதிகள்: முதல்வர் ஜெயலலிதா- Dinamani

சுடச்சுட

    
    Jaya campaign

    அருப்புக்கோட்டை: தமிழகத்தில்  அனைத்து தொகுதிகளும் தனது தொகுதிகள் என்ற உணர்வோடு செயல்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பேசுகையில், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், திருச்சுழி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய  14 தொகுதிகளிலும் கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகளை பட்டியலிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், ``நிறைவேற்ற பணிகள் இவ்வளவு தான் என்று கருதிவிடாதீர்கள். முழுவதும் சொல்வதானால் இன்று இரவு முழுவதும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். நாளைக்கும் சொல்லிக் கொண்டிருக்கலாம். நேரத்தின் அருமையைக் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

    ஒன்றை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள். எங்களைப் பொறுத்தவரை, என்னைப் பொறுத்தவரை, ஆளும் கட்சியின் தொகுதி, எதிர்க்கட்சியின் தொகுதி என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல், அனைத்து தொகுதிகளிலும் சமமாக வளர்ச்சிப் பணிகளை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். அனைத்து மக்களும் என் மக்கள். அனைத்து தொகுதிகளும் என் தொகுதிகள் என்ற உணர்வோடு தான் நான் செயல்பட்டு வருகின்றேன்; பணியாற்றி வருகின்றேன்

    உண்மை எப்படி நம்பிக்கையை கொடுக்கிறதோ, உழைப்பு எப்படி வசதியைக் கொடுக்கிறதோ, திறமை எப்படி வெற்றியைக் கொடுக்கிறதோ அது போல, எனது ஆட்சி உங்களுக்கு வசந்தத்தைக் கொடுத்திருக்கிறது.

    இந்த வசந்தம் தொடர்ந்திட, ஏழைகள் தொடர்ந்து ஏற்றம் பெற்றிட, தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடர்ந்திட, மின் வெட்டே இல்லை என்ற நிலை நீடித்திட, நிலைத்திட, பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திட, தொழில்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்திட, தொழிலாளர் நலன் பெருகிட, விவசாயம் விருத்தி அடைந்திட, சேவைத் துறை மேலும் செழித்திட, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்றிட, தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து நிலைநாட்டப்பட, தற்போதுள்ள நலத் திட்டங்கள் நீடித்திட, அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழகம் தொடர்ந்து பீடுநடை போட, மே மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்'' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai