Enable Javscript for better performance
உள்ளது உள்ளபடி....மொளச்சூர் ரா.பெருமாள் (அதிமுக) சட்டப்பேரவை உறுப்பினர், ஸ்ரீபெரும்புதூர்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளது உள்ளபடி....மொளச்சூர் ரா.பெருமாள் (அதிமுக) சட்டப்பேரவை உறுப்பினர், ஸ்ரீபெரும்புதூர்

    Published on : 15th April 2016 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    9

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் மொளச்சூர் ரா.பெருமாள். இவர் கடந்த 5 ஆண்டுகாலத்தில் தொகுதிக்குச் செய்துள்ள பணிகள் குறித்துக் கூறியதாவது:
     கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வடகால் பகுதியில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டு பல தொழிற்சாலைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பெற உள்ளனர்.
     வெளி மாநிலம், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்காக தொழிலாளர் தங்கும் விடுதி ரூ. 11 கோடி மதீப்பீட்டில் கொண்டு வரப்பட்டு, பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இதனால் சுமார் 10,000 தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
     மலைப்பட்டு, அதைச் சுற்றியுள்ள சுமார் 20 கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஸ்ரீபெரும்புதூர்- தாம்பரம் சாலையில் மலைப்பட்டு பகுதியில் ரூ. 2 கோடியில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
     ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஓட்டுநர் உரிமம், வாகனப்
     பதிவு உள்ளிட்டவற்றுக்காக காஞ்சிபுரம், மீனம்பாக்கம் பகுதிகளில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குச் செல்வதில் ஏற்பட்ட சிரமத்தைத் தவிர்க்க, ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டன.
     ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை ரூ. 25 லட்சத்தில் அமைக்கப்பட்டது. குன்றத்தூர் பகுதியில் மாநகர பேருந்துப் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது.
     சுங்குவார்சத்திரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் வசதிக்காக மொளச்சூர் பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ. 40 லட்சத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சுங்குவார்சத்திரம், மொளச்சூர், சந்தவேலூர், திருமங்கலம் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
     சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருவதால், இதனை 80 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
     ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பாக ரூ. 150 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இத்தொகுதியில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த வந்த சாலைகள் தற்போது நல்ல நிலையில் உள்ளன.
     ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் நிறைவுபெற்று, திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
     சுங்குவார்சத்திரம் பகுதியில் சுங்குவார்சத்திரம்- திருவள்ளூர் சாலையில் 4 கி.மீ. தொலைவுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ரூ. 4 கோடியில் மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை சீரமைக்கப்பட்டது.
     இதுதவிர சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தொகுதியில் உள்ள பல அரசு பள்ளி கட்டடங்கள், பள்ளி சுற்றுச்சுவர், அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக் கடைகள், கான்கிரீட் சாலைகள், தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
     சந்திப்பு: எல்.அய்யப்பன்
    நிறைவேறாதவை
     சுங்குவார்சத்திரம் பகுதியில் பணிமனையுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க, சுங்குவார்சத்திரத்தை அடுத்த திருமங்கலம் பகுதியில் சுமார் 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டும், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
     ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் குன்றத்தூர் பகுதியில் ரூ. 3 கோடியில் தரைப்பாலம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டும் பணி தொடங்கப்படவில்லை. அதேபோல் வெங்காடு பகுதியிலும் ரூ 1கோடியில் தரைப்பாலம் அமைக்க டெண்டர் விடப்பட்டும் பணிகள் தொடங்கப்படாமலேயே உள்ளன.
     சுங்குவார்சத்திரம் பகுதியில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு மொளச்சூர் பகுதியில் புதிய கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டும், திட்டம் ஆய்வு நிலையிலேயே உள்ளது. வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறையின் கருத்து வேறுபாடுகள் காரணமாக இடம் தேர்வு செய்யப்பட்டும், படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படாமல் உள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai