Enable Javscript for better performance
திமுக வேட்பாளர் பட்டியல்: கொந்தளிப்பில் தொண்டர்கள்- Dinamani

சுடச்சுட

  
  11

  உடன்பிறப்பே என்று கருணாநிதி பேசத் தொடங்குவதில் இருந்து, திமுகவின் அனைத்து நடவடிக்கைகளிலும் தனி மரபு பின்பற்றப்படும். அது, ஒவ்வொன்றாகத் தற்போது காற்றில் கரையத் தொடங்கியுள்ளது.
  சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு என்பது திமுகவில் எப்போதும் ஒரு திருவிழா போல நடைபெறும். பொதுக்கூட்டம் நடத்தி, அதில் வேட்பாளர்களின் பட்டியலை கருணாநிதி ஏற்ற இறக்கத்துடன் படிப்பார்.
  சைதைக்கு கிட்டு, அவர் செயலில் சிட்டு என்று கருணாநிதி அறிவிக்கும்போதே, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள்கூட அனைத்தையும் மறந்து தேர்தல் பணியாற்றத் தொடங்கிவிடுவர்.
  இந்த முறை வேட்பாளர்கள் பட்டியல் திமுகவின் வழக்கத்துக்கு மாறான முறையில் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பட்டியல் புதன்கிழமை (ஏப்.13) வெளியாகப் போகும் தகவல் திமுகவின் அனைத்து நிர்வாகிகளுக்கும் இரண்டு நாள்களுக்கு முன்பே பரவிவிட்டது. இதனால், சென்னை அறிவாலயத்துக்கும், கோபாலபுரத்துக்கும் நிர்வாகிகள் மாறிமாறிச் சென்று வந்தனர்.
  ஆனால், அனைவரது எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக வேட்பாளர்கள் பட்டியல் பத்திரிகை அலுவலகங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலை காரணமாகத்தான் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படாமல், மின்னஞ்சலில் வெளியிடப்பட்டது என்றால், அது உண்மை இல்லை.
  வேட்பாளர்கள் தேர்வில் கருணாநிதி- மு.க.ஸ்டாலின் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதை மூடி மறைக்க முடியவில்லை. இருப்பினும், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும்போதே உள்கட்சி மோதல் எதுவும் தலைதூக்கிவிடக் கூடாது என்ற அச்சத்திலேயே திமுக தலைமை அதை மின்னஞ்சலில் வெளியிட்டது. அந்த அச்சம் உண்மையானது என்பதற்கு தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் கொந்தளிப்பான போராட்டங்களே சாட்சியங்களாக உள்ளன.
  அதிருப்தி: குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் கா.ராமச்சந்திரன். இந்த முறை அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், நீலகிரி மாவட்ட திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுக தலைமைக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தின் சுருக்கம்:
  தமிழகத்தின் மேற்குப் பகுதியில் எதிரிகளின் சூழச்சியால், கடந்த தேர்தலில் ஒருவர்கூட வெற்றி பெறாத நிலையில், குன்னூர் தொகுதியில் வெற்றி பெற்று திமுகவின் மதிப்பை உயர்த்தியவர் ராமச்சந்திரன். சொந்தச் செலவில் நீலகிரியில் கலைஞர் அறிவாலயம் கட்டியவர். அவருக்கு வாய்ப்பளிக்காதது மர்மமாக உள்ளது. திமுக தலைமை முடிவை மறுபரிசீலனை செய்யாவிட்டால் தீக்குளித்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வோம் என்பதாக அந்தக் கடிதம் முடிகிறது. இதுபோன்ற கடிதங்கள் அண்ணா அறிவாலயத்துக்கு அதிக அளவில் வந்துள்ளன.
  அடிதடி- ரகளை: தமிழகம் முழுவதும் பல்வேறு வேட்பாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுகவினர் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக எம்.பி.நந்தகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். துரைமுருகன் பரிந்துரையின் பேரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு திமுகவைச் சேர்ந்த பாபுவின் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தை வியாழக்கிழமை அவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அங்கு நந்தகுமார் ஆதரவாளர்களுக்கும், பாபு ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
  பாளையங்கோட்டை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் மைதீன்கான் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை மாற்றக் கோரி அங்குள்ள திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மைதீன்கானின் உருவப்பொம்மையும் எரிக்கப்பட்டது.
  சீர்காழி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிள்ளை ரவீந்திரனை மாற்றக் கோரி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வின்போது திடீரென ஒருவர் தீக்குளிக்க முயல, பின்னர் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வேட்பாளரான சதீஷை மாற்றக் கோரி, அந்தப் பகுதி திமுகவினர் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் திமுகவுக்குப் புதிது இல்லை. எல்லாத் தேர்தல்களிலும் வேட்பாளர்கள் அறிவிப்புகளுக்குப் பிறகு நடக்கக்கூடியதுதான். இன்னும் சொல்லப்போனால் கட்சி பலமாக இருப்பதற்கான அடையாளமாகக்கூட இந்த நிகழ்வுகளைத் திமுக தலைமை பார்ப்பது நடைமுறை. எனினும், இந்த முறை மோதல்களும், கலகங்களும் அதிகம்.
  வேட்பாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் ஆர்வத்தின் காரணமானது என்கிறார் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்.
  பரிசீலிக்கப்படுமா? வேட்பாளர்களை மாற்றுவது தொடர்பாக நியாயமான கோரிக்கையாக இருந்தால், திமுக தலைமை பரிசீலிக்கும் என்றும் அவர் கூறுகிறார். ஆனால், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் யாரையும் திரும்பப்பெறும் எண்ணம் திமுக தலைமையிடம் இல்லை. வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் புதன்கிழமை கருணாநிதி தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது, வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தற்போது நடைபெறும் சம்பவங்களைவிட, அதிக களேபரத்துடன் நடந்து முடிந்ததாம்.
   ஸ்டாலின் கோபம்: பல்லாவரம் தொகுதியில் இ.கருணாநிதியை வேட்பாளராக நிறுத்தும் தனது முடிவில் இருந்து இறங்கி வர கருணாநிதி மறுத்துவிட, ஒரு கட்டத்தில் ஸ்டாலின் கோபித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. பிறகு, எப்படியோ ஸ்டாலினை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். ஒரு வழியாக வேட்பாளர்கள் பட்டியலும் வெளியானது.
  கருணாநிதி தனது விருப்பப்படி ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கே இந்த நிலை எனும்போது, சாதாரண தொண்டர்கள் போராட்டத்தால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்கிறார் திமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர். இந்த நிலையில், கருணாநிதி வெளியிட்டுள்ள வழக்கமான அறிக்கையால் தொண்டர்கள் சமாதானமடைவார்களா என்பது தெரிய வில்லை.
   

   -அதிரவன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai