Enable Javscript for better performance
சம நீதி - சம வாய்ப்பு என்பதை எல்லோருக்கும் உறுதி செய்ய வேண்டும்!- Dinamani

சுடச்சுட

    

    சம நீதி - சம வாய்ப்பு என்பதை எல்லோருக்கும் உறுதி செய்ய வேண்டும்!

    By dn  |   Published on : 15th April 2016 12:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Karunanidhi

    அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம நீதி - சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது: -

    தமிழகத்தின் பதினைந்தாவது சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நான்  இதுவரை மூன்று முறை அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன்.  நான் 23-1-2016 அன்று வெளியிட்ட முதல் அறிக்கையிலேயே தமிழகத்தில் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை 31 லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை இருக்கிறது என்றும்;  அதற்கு உரிய கணக்கியல் ரீதியான அடிப்படையையும் விளக்கியிருந்தேன்.  அனைத்து எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களோடு போலி வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பற்றியும் அவர்களை  வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டிய அவசர அவசியம் குறித்தும் அறிக்கைகள் வெளியிட்டிருந்தார்கள்.

    பின்னர் சென்னை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 தகுதியில்லாத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.  இதேபோல  தமிழகத்திலே உள்ள மற்ற மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள போலி வாக்காளர்களும், வெளி மாநில அதிகாரிகளின் மேற்பார்வையில், முழுமையான சரிபார்த்தலின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும் என்று தி.மு.கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    தி.மு.கழகத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கப்பட்ட போலி வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு ஓரளவுக்கு போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். எனினும், தமிழக வாக்காளர் பட்டியல்களில், ஆளும் அ.தி.மு.க.வின் அத்துமீறல்களின் காரணமாக, ஏற்கனவே இடம் பெற்றுள்ள போலி வாக்காளர்கள் அனைவரும் முழுமையாக நீக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

    எனவே போலி வாக்காளர்களை நீக்குதல் பற்றிய பிரச்சினையில் தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருமுறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். பொதுத் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டுமென்றால்,  தேர்தலை நடத்தும் அதிகாரிகள் யாருக்கும் பாரபட்சம் காட்டாமல், நடுநிலையோடு, சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க முடியாது.  

    ஆளும் அ.தி.மு.க. சார்பு அதிகாரிகள்  தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது, தேர்தல் ஆணையத்தின்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குறைத்து வருகிறது என்று பரவலாகப் பேசப்படுவது தேர்தல் ஆணையத்தின் செவிகளில் விழுகிறதா என்று தெரியவில்லை.

    கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களாகவே இருப்பவர்கள், "அம்மாவின் ஆணைப்படி நல்ல மழை பெய்திருக்கிறது" என்று ஜெயலலிதாவுக்குப் புகழாரம் சூட்டி அவருடைய அனுக்கிரகத்திற்கு ஆளாகலாம் என்று எண்ணிய அதிகாரிகள், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு அனுப்பப்பட்டபோது  அவரது கட்சியினர் நடத்திய ஹோமங்களிலும், பூஜைகளிலும், முளைப்பாரி ஊர்வலங்களிலும் கலந்து கொண்ட அதிகாரிகள் அனைவரும் அவரவருடைய பதவியிலேயே இருந்து இன்னும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    அதுமட்டுமல்லாமல்  ஆளும் அ.தி.மு.க.வின் ஏராளமான பணத்தை, காவல்துறை வாகனங்களிலும், டாஸ்மாக் வாகனங்களிலும், ஆவின் வாகனங்களிலும் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்வதற்குத் துணைபுரிந்த அதிகாரிகள் இதுவரை கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறார்களே என்ற எண்ணம் அரசியல் கட்சியினர் இடையேயும் ஊடகத்தினர் இடையயேயும் ஏற்பட்டிருப்பதை தேர்தல் ஆணையம் அறிந்து வைத்திருக்கிறதா என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

    சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் நடவடிக்கைகளை வகுத்துக் கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் பட்டியல், தி.மு.கழகத்தின் சார்பிலும், பல்வேறு எதிர்க் கட்சிகளின் சார்பிலும் தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 

    அதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது, நியாயமான தேர்தலுக்கு அடையாளமாகாது.  மேற்கு வங்காளத்தில் நடைபெறும் தேர்தல்களையொட்டி தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள 37 ஐ.ஏ.எஸ்.,  ஐ.பி.எஸ்., மற்றும் பல்வேறு நிலைகளில் இருக்கும் அதிகாரிகள் 17-3-2016 அன்றே, தேர்தல் பணிகளில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. 

    ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட நடவடிக்கை எதையும் தேர்தல் ஆணையம் இதுவரை மேற்கொள்ளாமல் இருப்பது, ஆளும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்து வரும் அதிகாரிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதைப் போல இருக்கிறது என்று பல்வேறு தரப்பினரும் கருதுகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai