Enable Javscript for better performance
சென்னையில் 64 மாதிரி வாக்குச்சாவடிகள் !- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 64 மாதிரி வாக்குச் சாவடிகளை அமைக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
     இந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் புதிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
     இதில் குடிநீர், கழிப்பிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக வாக்களிக்கும் புதிய வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு முன்னோட்டமாக மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்படும்.
     சென்னையில் கடந்த தேர்தலின்போது பெண்கள் வாக்குப் பதிவு சதவீதம் எங்கு குறைவாக பதிவானதோ, அந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளாக மாற்றப்படுகின்றன.
     வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்பதால் பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. பெண்கள் பணியாற்றும் வாக்குச் சாவடிகளில் அரசியல் கட்சிகளின் முகவர்களையும் பெண்களையே நியமிக்குமாறு கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளது.
     சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் தலா ஒன்று வீதம் 16 பெண்கள் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. கடந்த தேர்தல்களின் போது கொளத்தூர், நுங்கம்பாக்கம், கிண்டி, அடையாறு ஆகிய இடங்களில் குளிர் சாதன வசதியுடன் கூடிய மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு குடிக்க மோரும் வழங்கப்பட்டது.
     அதேபோல இந்தாண்டும் கத்திரி வெயில் நாள்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க பல்வேறு வசதிகளை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai