Enable Javscript for better performance
நினைவலைகள்...தேர்தலில் போட்டியிட நல்லவர்களுக்கே வாய்ப்பு! - Dinamani

சுடச்சுட

    

    நினைவலைகள்...தேர்தலில் போட்டியிட நல்லவர்களுக்கே வாய்ப்பு!

    By dn  |   Published on : 15th April 2016 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    12

    வேட்பாளருக்காக வாக்கு என்ற நிலை மாறி கட்சித் தலைவருக்காக வாக்கு என்ற நிலையால்தான் நல்லவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக வர முடியவில்லை என்றார் அரசியல் சாசனப்படி அமைக்கப்பட்ட முதல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டி.எம்.காளியண்ணன்.
     96 வயதாகும் இவர், 1948-இல் தனது 28 வயதிலேயே இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக்கு உறுப்பினராக சென்னை மாகாண சட்டப்பேரவையால் தேர்வு செய்யப்பட்டார். இவர் தனது கடந்த கால தேர்தல் அனுபவங்கள் குறித்து கூறியதாவது:
     அரசியல் சாசனப்படி அமைக்கப்பட்ட தமிழகத்தின் முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவருமே சுயேச்சை வேட்பாளர்கள். அப்போது, வீடு வீடாக நடந்தே சென்று வாக்கு கேட்போம்.
     எங்கு சென்றாலும் வீடுகளில் பெரியார் படம்தான் இருக்கும். அந்தத் தேர்தலில் பெரியார் கொள்கைப் பிடிப்புள்ள கே.வி.கே.ராமசாமி சுயே ச்சை வேட்பாளாகப் போட்டியிட்டார். அவர், என்னைப் பார்த்து தலித் குடியிருப்புகளுக்கு வாக்கு கேட்டு வர வேண்டாம். அந்த வாக்குகள் அனைத்தும் எனக்குத்தான் என்றார். இருப்பினும் நான், தலித் குடியிருப்புகளுக்கு வாக்குகள் கேட்டுச் சென்றேன். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல் சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்தேன். 2012-இல் நடைபெற்ற பேரவையின் வைர விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்தார். உடல்நிலை காரணமாக நேரில் செல்ல முடியவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் வீட்டுக்கு நேரில் வந்து நினைவுப் பரிசை வழங்கினார்.
     அந்தக் கால தேர்தல்: 1952-இல் ராசிபுரம், 1957, 1962-இல் திருச்செங்கோடு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அந்தக் காலத்தில், வேட்பாளர் நல்லவராக இருக்கிறாரா என்று பார்த்துத்தான் கட்சிகள் வாய்ப்பு அளிக்கும். கட்சியின் கொள்கைகளையும், தொகுதிக்கு செய்யப் போகும் பொதுவான திட்டங்களையும் கூறித்தான் வாக்குச் சேகரிப்போம். தேர்தலுக்கு மக்களைச் சந்திக்கச் செல்லும் வாகனம், சாப்பாடு, வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துவர வாகன வசதி ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவைதான் அப்போதைய வேட்பாளர் செய்த செலவு.
     ஆனால், தற்போது தலைவருக்காகத்தான் மக்கள் வாக்களிக்கின்றனர். வேட்பாளர்கள் யாராக இருந்தால் என்ன என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால்தான், நல்லவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை.
     ஒவ்வொரு தேர்தலிலும் பூர்வீக நிலத்தை விற்றுத்தான் தேர்தலில் செலவு செய்தேன். இப்போது உள்ள பிரதானக் கட்சி வேட்பாளர்கள் எப்படி பணம் சேர்க்கின்றனர்? தேர்தலுக்கு கோடிக்கணக்கில் எப்படி செலவு செய்கின்றனர் என்பது ஊரறிந்த உண்மை.
     இப்படி ஒரு தேர்தலை நான் பார்த்ததில்லை: 1952, 1957, 1962 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றேன். 1967 தேர்தலில் திமுக வேட்பாளர் அன்பழகனிடம் தோல்வியடைந்தேன். இதற்காக, அவரை அண்ணா அமைச்சராக்கினார். இதேபோல, 1977, 1980 தேர்தல்களில் அதிமுகவைச் சேர்ந்த சி.பொன்னையனிடம் தோல்வியடைந்தேன். இதற்காக, அவரை எம்.ஜி.ஆர். அமைச்சராக்கினார்.
     கடந்த 65 ஆண்டுகளில் தமிழகத்தில் ஜனநாயகம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. அவற்றில் சுமார் 30 கட்சிகள் வரை தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு வளர்ந்துள்ளன. இந்தத் தேர்தலில் கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி போன்று வேறு எந்தத் தேர்தலையும் நான் பார்க்கவில்லை.
     ஜாதிக் கட்சிகள் அனுதாபங்களை மட்டுமே பெற முடியும், வாக்குகளைப் பெற முடியாது. ஏனெனில், அதிமுக., திமுக போன்ற கட்சிகளில் தேர்வு செய்யப்படும் எம்.எல்.ஏ.க்கள் அந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கின்றனர்.
     மக்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை: கட்சியின் கொள்கைக்காகவும், வாக்குறுதிகளுக்காகவும், வேட்பாளரின் நல்லியல்புக்காகவும் வாக்களிக்கும் நிலை மீண்டும் வர வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் அரசியல் சூழல் மாறும். அந்த நிலை மீண்டும் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றார் அவர்.
     -கே.விஜயபாஸ்கர்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai