Enable Javscript for better performance
பா.ம.க தேர்தல் அறிக்கை: 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - Dinamani

சுடச்சுட

    

    பா.ம.க தேர்தல் அறிக்கை: 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு

    By dn  |   Published on : 15th April 2016 02:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    PMK

    பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..

    வேலைவாய்ப்பு

    ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்கு வேலை உறுதி செய்யப்படும்.

    5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    சுய தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்படும். முறைசாரா தொழில் தொடங்குவதற்காக அரசே உத்தரவாதம் அளித்து கடன் பெற்றுத் தரும்.

    இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

    குறைந்தபட்சம் 10 பேருக்கு வேலை வழங்கக்கூடிய புதிய நிறுவனங்களைத் தொடங்க அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வட்டியில்லா கடனாகவோ / அரசின் பங்கு மூலதனமாகவோ வழங்கப்படும்.

    தகவல் தொழில்நுட்பத் துறை

    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோர் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, தனிப்பிரிவு தொடங்கப்படும்.

    பணி இழந்த தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்களுக்கு அரசு செலவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோரின் வசதிக்காக, இரவு நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

    ஒரு கோடி பேருக்கு வேலை

    தமிழ்நாட்டில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

    தமிழ்நாட்டில் 6 பெரிய துறைமுகங்களும், 20 சிறிய துறைமுகங்களும் இருப்பதைப் பயன்படுத்தியும், புதிய கிடங்குகளை உருவாக்கியும் தமிழகத்தை சர்வதேச தளவாடக் கிடங்கு மையமாக (International Warehousing Hub) மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழக அரசுக்-குச் சொந்தமான கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்கள் விரிவாக்கப்படும்.

    சென்னையில் வாகனம் சார்ந்த தொழில்கள் அமைக்கவும், கோவை மற்றும் திருப்பூரில் ஆடை சார்ந்த தொழில்கள் அமைக்கவும் வெளிநாடுகளில் முதலமைச்சர் அன்புமணி ராமதாஸ் நேரில் சென்-று முதலீடுகளைத் திரட்டி வருவார்.

    உலக மருத்துவ கவனிப்பு மையமாக தமிழகம் மாற்றப்படும்.

    சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்கள் மருத்துவச் சுற்றுலாத் தலங்களாக மாற்றப்படும்.

    மருத்துவம் சார்ந்த அயல்பணி வணிக மையமாக (Health Care BPO) தமிழகம் உருவாக்கப்படும்.

    தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் செவிலியர் பயிற்சிப் பள்ளிகளை அமைத்து பல்லாயிரக்கணக்கான செவிலியர்களை உருவாக்கி, வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை பெற்றுத்தரப்படும்.

    கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் ஆடை தயாரிப்பு நிறுவனங்களை அதிக அளவில் தொடங்குவதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஏற்றுமதி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

    தமிழகத்தின் பொருட்கள் ஏற்றுமதி  ரூ.1.90 லட்சம் கோடியாகவும், தகவல் தொழில்நுட்ப சேவை சார்ந்த ஏற்றுமதி ரூ.78,400 கோடியாகவும் உள்ளது. இது இரட்டிப்பாக்கப்படும்.

    மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

    பொருளாதார வளர்ச்சி

    பொருளாதார விஷயங்களில் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார வல்லுனர் குழு அமைக்கப்படும்.

    தமிழகத்தின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 10 விழுக்காட்டுக்கும் கூடுதலாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    சர்க்கரை மீதான 5% மதிப்பு கூட்டு வரி ரத்து செய்யப்படும்.

    நிலங்களின் மீதான வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படும்.

    ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் இலவசம்

    அனைவருக்கும் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றுக்கான அனைத்து தேவைகளும் இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மிச்சமாகும். இதை அக்குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவசமாக கருதலாம்.

    தமிழகத்தின் கடன் சுமையை குறைக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 1.08 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும்.

    இந்த நடவடிக்கைகளின் மூலம் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படுவதால் இனி அதிகமாக கடன் வாங்கத் தேவையிருக்காது.

    உட்கட்டமைப்பு வசதிகள்

    அனைத்து மாவட்ட சாலைகளும் இருவழிப் பாதைகளாக்கப்படும்; அனைத்து மாநில நெடுஞ்சாலைகளும் நான்குவழி பாதைகளாக மாற்றப்படும்.

    அனைத்து மாவட்டத் தலைநகரங்களும் சென்னையுடன் தேசிய நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

    சென்னை -கன்னியாகுமரி இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை ஆறுவழிப் பாதையாக மாற்றப்படும்.

    சாலைகளை அமைப்பவர்களே அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவற்றை பராமரிக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக சேர்க்கப்படும்.

    சென்னை - கன்னியாகுமரி இடையே கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்கப்படும்; வேலூருக்கு விமான சேவை தொடங்கப்படும்.

    கட்டமைப்பு தேவைகளை முன்கூட்டியே கணக்கிட்டு நிறைவேற்ற வசதியாக தமிழ்நாடு கட்டமைப்பு ஆணையம் (Tamil Nadu Infrastructure Authority) அமைக்கப்படும்.

    குடிசைகள் இல்லாத தமிழகம்

    குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்குடன் குடிசைகளில் வாழும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்படும். அவர்களுக்கு அடுத்த இரு ஆண்டுகளில் கழிப்பறை, சூரிய ஒளி மின்சார வசதியுடன் கூடிய வீடுகள் கட்டித்தரப்படும்.

    சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரவில் தங்குவதற்கான வீடுகள் கட்டித் தரப்படும்.

    போக்குவரத்து

    பேருந்துக்கட்டணங்கள் குறைக்கப்படும்.

    ஆம்னி பேருந்துகளின் கட்டணம் முறைப்படுத்தப்படும்.

    ஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக அனைத்து வசதிகளுடன் கூடிய அரசுப் போக்குவரத்துக்கழக பேரூந்துகள் இயக்கப்படும்.

    லாபத்தில் இயங்கும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படும்.

    அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் நடைபெறும் ஊழல்கள் ஒழிக்கப்பட்டு, அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும்  லாபத்தில் இயக்கப்படும் நிலை ஏற்படுத்தப்படும்.

    அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2000 கோடி நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்படும்.

    சென்னையில் மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும். கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் மெட்ரோ சேவை அறிமுகம் செய்யப்படும்.

    தமிழகத்தில் ரயில் திட்டங்களை விரைந்து முடிக்க வசதியாக திட்டச் செலவில் 50 விழுக்காட்டை மாநில அரசு வழங்கும்.

    சென்னையில் பேருந்து விரைவுப் போக்குவரத்துத் திட்டம் (BRTS) செயல்படுத்தப்படும்.

    மின்துறை

    மின்துறை சீர்திருத்தம் மூலம் 15% மின்கட்டணம் குறைக்கப்படும்.

    இருமாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்துவதற்கு பதில், மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும். இதனால், 25% வரை கட்டணம் குறையும்.

    தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு புத்துயிரூட்ட வல்லுனர் குழு அமைக்கப்படும். அதன் பரிந்துரைகள் 3 மாதங்களில் பெறப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மின்துறை சீர்திருத்தங்களின் மூலம் மின்வாரியம் லாபம் ஈட்டும் நிலை ஏற்படுத்தப்படும்.

    தமிழகம் உண்மையாகவே மின்மிகை மாநிலமாகும் வகையில் புதிய மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    சூரியஒளி மின்திட்டம்

    தமிழ்நாட்டில் உள்ள 12,500 ஊராட்சிகளிலும் தலா ஒரு மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்நிலையம் அமைக்கப்பட்டு, அதிலிருந்து அங்குள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும். இது 10 ஆண்டுகாலத் திட்டமாக செயல்படுத்தப்படும்.

    வீட்டின் கூறைகளில் சூரிய ஒளி மின்னுற்பத்தி ஊக்குவிக்கப்படும். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அரசே எடுத்துக் கொண்டு அதற்கான விலையை வழங்கும்.

    மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார சட்டத்தின் அம்சங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படும்.

    தண்ணீர்

    தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.

    நிலத்தடி நீர் மாசுபட்ட ஊராட்சிகளில் சவ்வூடுபரவல் (RO_ Reverse Osmasis) முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

    அனைத்து நகரப்பகுதிகளிலும் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் வழங்கப்படும்.

    நகரப்பகுதிகளில் குடிநீர் மற்றும் சமையல் பயன்பாட்டுக்காக 40 லிட்டர் உட்பட 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவது  உறுதி செய்யப்படும்.

    நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    அனைத்து நதிநீர் பிரச்சினைகளையும் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.

    சமூக நீதி

    தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் 100% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த முயற்சி.

    தனியார் துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை.

    சமூக நலன்

    தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடை சேவை உள்ளிட்ட அனைத்துச் சேவைகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்.

    படிப்பை முடித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில்  பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் வேலை கிடைக்காமல் இருக்கும் அனைவருக்கும் மாதம் ரூ.3000 வரை உதவித் தொகை வழங்கப்படும்.

    60 வயதான அனைவருக்கும் மாதம் ரூ. 2000 ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக அவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அரசிடம் உள்ள ஆவணங்களின்படி இவர்கள் அடையாளம் காணப்பட்டு உதவி வழங்கப்படும்.

    ஆதரவற்றோர், கைம்பெண்கள், வேலை செய்ய முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.2500 ஓய்வூதியம் வழங்கப்படும்.

    சிறுபான்மையினர் நலன்

    மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்த சிறுபான்மை சமுதாயத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் அனைவரும் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள்.

    கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

    பட்டியலினத்தவர் பழங்குடியினர் நலன்

    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்புக்கூறு திட்டம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும்.

    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாணவ&மாணவியர்கள் கல்வி உதவித் தொகைக்கான நிதி ஒதுக்கீடு 50% அதிகரிக்கப்படும்.

    அட்டவணை இன மக்களுக்கான சிறப்புக் கூறுத்திட்டம், பழங்குடியினர் உட்கூறு திட்டம் ஆகியவை சிறப்பாகச் செயல்படுத்தப்படும்.

    அரசுத் துறையில் நிரப்பப்படாத பணியிடங்களைச் சிறப்புப் பணி நியமனங்கள் மூலமாக நிரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    மனிதக் கழிவுகளையும், கழிவுநீர்ப் பாதை மற்றும் தொட்டிகளையும் மனிதர்களே அகற்றும் அநீதிக்கு முடிவு கட்டப்படும்.

    பிற பிற்படுத்தப்பட்டோர் நலன்

    தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும்.

    தேசிய அளவில் பிறபிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி வெற்றிபெறுவோம்.

    பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும். இடைக்கால ஏற்பாடாக கிரிமிலேயருக்கான வருவாய் வரம்பை தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

    மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிரிமிலேயர் அல்லாதவர்கள் கிடைக்காவிட்டால், அந்த இடத்தை கிரிமிலேயரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கும்படி மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

    மாற்றுத்திறனாளிகள் நலன்

    கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடு முழுமையாக கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

     மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பின்னடைவு பணியிடங்கள் கணக்கிடப்பட்டு நிரப்பப்படும்; மாத உதவித் தொகை ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.

    பால் உற்பத்தியாளர் நலன்

    பால் உற்பத்தியாளர்கள் எவ்வளவு பால் கொண்டு வந்தாலும், அதை ஆவின் கொள்முதல் செய்யும்.

    ஆவின் பால் கொள்முதல் தினமும் 50 லட்சம் லிட்டராக அதிகரிக்கப்படும்.

    நெசவாளர் & மீனவர்கள் நலன்

    பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு 40% கூலி உயர்வு வழங்கப்படும்.

    காஞ்சிபுரம் & ஆரணி, கும்பகோணம் & திருபுவனம் ஆகிய இடங்களில் பட்டுப்பூங்கா அமைக்கப்படும்.

    கூட்டுறவு வங்கிகளில் நெசவாளர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    நெசவாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும்.

    மீன் பிடித் தொழிலை மேம்படுத்தவும், மீன் பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    படகுகள், வலைகள் மானிய விலையில் வழங்கப்படும்.

    ஆழ்கடல் மீன்பிடிப்பு ஊக்குவிக்கப்படும்.

    கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்; இலங்கைப் படைகள் பறிமுதல் செய்து வைத்துள்ள படகுகள் மீட்கப்படும்.

    மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி இரட்டிப்பாக்கப்படும்.

    வணிகர்கள் நலன்

    வரிச்சீர்திருத்தம் தொடர்பான வணிகர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

    சிறு வணிகர்களுக்கு Debit Card and Credit Card Swiping Machine கள் வங்கிகளின் மூலம் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான மானியத்தை தமிழக அரசே வழங்கும்.

    சிறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இலவசக் காப்பீட்டு வசதி வழங்கப்படும்.

    ஆசிரியர் & அரசு ஊழியர் நலன்

    அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும்.

    புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படும்.

    7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

    இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 15% சேர்த்து வழங்கப்படும்.

    போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,000 கோடி மதிப்பிலான ஓய்வூதியப் பயன்கள் உடனடியாக வழங்கப்படும்.

    போக்குவரத்துக் கழக பணியாளர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாக்கப்படுவர்.

    அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.

    அனைத்து நிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் காணப்படும் முரண்பாடுகள் களையப்படும்.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், அரசுத் துறைகளில் பணியாற்றும்  பகுதி நேர ஊழியர்கள்  அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

    அரசு ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து சரி செய்வதற்காக  அரசுத்துறை செயலாளர் தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும்.

    பெண்கள், திருநங்கையர் நலன்

    காவல்துறையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    சென்னை, தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கூடுதலாக 3 மகளிர் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும்.

    பெண்களுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்தும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

    தமிழ்நாட்டில் சத்து குறைந்த குழந்தைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் வழங்கப்படும்.

    கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கையர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    குடும்பத்தைப் பிரிந்து வாழும் திருநங்கையர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு வசதியாக விடுதிகள் அமைத்துத்தரப்படும்.

    இந்துசமய அறநிலையத்துறை

    கோயில்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் மீட்கப்படும்.

    கோயில் நிலங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

    இந்துசமய அறநிலையத்துறை மற்றும் கோயில்களின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

    பழங்கால கோயில்கள் அனைத்தும் சீரமைக்கப்படும்.

    கோயில் குளங்கள் அனைத்தும் தூர்வாரி மேம்படுத்தப்படும்.

    மசூதிகள் & தேவாலயங்கள்

    வ-க்ஃபு வாரியச் சொத்துக்கள் மீட்கப்படும்.

    தேவாலயங்கள் தொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

    கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கான மின் கட்டணம் 40 விழுக்காடு வரை குறைக்கப்படும்.

    பத்திரிகையாளர் நலன்

    பத்திரிகையாளர்கள் நல நிதிக்கு அரசு விளம்பரங்களில் இருந்து 3% தொகை வழங்கப்படும்.

    நீதிபதி மஜிதியா குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை.

    புதிய மருத்துவக் காப்பீடு, வீட்டுவசதித் திட்டம், வாடகை வீடு திட்டம், மாத ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்வு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    பத்திரிகையாளர்கள் மடிக்கணினி வழங்க 90% மானியத்துடன் கடன், இலவச இணையதள வசதி.

    திரைப்படத்துறை

    திருட்டு வி.சி.டி.க்களை அடியோடு ஒழிக்க நடவடிக்கை.

    திரைத்துறையில் இழந்த அனைத்து பெருமைகளையும், வாய்ப்புகளையும் மீட்டு, சென்னையை தென்னிந்திய திரை உலகின் தலைநகராக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

    தனியார் பங்களிப்புடன் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த படப்பிடிப்புத் தளங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகத்தில் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான கட்டணங்கள் குறைக்கப்படும்.

    சென்னையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அசைகலை பூங்கா (Animation Park) அமைக்கப்படும்.

    திரைத்துறையில் தனி நபர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்படும். அரசின் தலையீடு முற்றிலுமாக இருக்காது. திரைத்துறை ஒரு கலைத்துறை என்ற வகையில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படும்.

    குறைந்த செலவில் தரமான திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    விலைவாசிக் கட்டுப்பாடு, நியாயவிலைக் கடை

    சாந்தகுமார் குழு பரிந்துரை அறிக்கையின்படி, உணவுப் பொருள் மானியத்தை மக்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டம் (Direct Benefit Transfer), நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், நியாயவிலைக் கடைகளையும் மூட வகை செய்யும் என்பதால், அத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்காது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் கணினி மயமாக்கப்படும்.

    அனைத்துப் பொருட்களையும் அனைத்து நாட்களிலும் வழங்க வகை செய்யப்படும்.

    நியாயவிலைக் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கும் திட்டமும், பருப்பு உள்ளிட்ட பிற தானியங்களை மானிய விலையில் வழங்கும் திட்டங்களும் தொடரும். அரிசி 20 கிலோ மூட்டையாகவும், பிற பொருட்கள் ஒரு கிலோ பாக்கெட்டுகளிலும் வழங்கப்படும்.

    200 குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்கப்படும்.

    விலைவாசிக் கட்டுப்பாடு:

    விலைவாசியைக் குறைப்பதன் மூலம் பெரும்பான்மையான மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்க முடியும். இதற்காகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் நியாய விலைப் பல்பொருள் அங்காடிகள் திறக்கப்படும். இவற்றில் அனைத்துப் பொருட்களும் அடக்க விலைக்கே விற்பனை செய்யப்படும்.

    சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறிய அளவில் நடத்தப்பட்டு வரும் பண்ணைப் பசுமைக் கடைகள் தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்படும்.

    பண்ணைப் பசுமைக் கடைகளுக்காக மாவட்ட அளவில் அரசு கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். இதனால் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.

    இளைஞர் நலன் & விளையாட்டு

    படித்து முடித்தவுடன் வேலைக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பில் திறன்சார் கல்வி, அறிவுசார் கல்வி, தொழிற்கல்வி ஆகியவை அறிமுகம் செய்யப்படும்.

    இளைஞர்களுக்கு பொது அறிவு, கணினி அறிவு, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறன், நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்கும் திறன் ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இளைஞர்களுக்கு வேலை வழங்க வசதியாக, ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான சிறப்பு செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

    விளையாட்டு

    தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும்.

    அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

    தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் பிற வல்லுநர்கள் கலந்து ஆய்வு செய்து பத்தாண்டு விளையாட்டு செயல் திட்டம் ஒன்றினை வகுக்கும். ஒலிம்பிக் போட்டியில் தமிழக இளைஞர்கள் தங்கப் பதக்கம் வெல்லும் சாதனையை நிகழ்த்தும் அளவிற்குத் தேர்ச்சித் தரத்தை இது உருவாக்கும்.

     தடகளம், சிம்னாஸ்டிக், கால்பந்து, ஆக்கி, கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிசு, பாட்மிண்டன், குத்துச்சண்டை, சடுகுடு, நீச்சல், சதுரங்கம் உள்பட விளையாட்டின் அனைத்துத் துறைகளிலும் தனித் தேர்ச்சிக்கு வலுவான ஊக்கம் அளிப்பது இந்தச் செயல்திட்டத்தின் அடிப்படையாக இருக்கும்.

    இயற்கை வளப் பாதுகாப்பு

    அனைத்து கிரானைட் மற்றும் தாதுமணல் குவாரிகள் முறைப்படுத்தப்படும்.

    கிரானைட், தாது மணல் மற்றும் ஆற்று மணல் கொள்ளை குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்.

    ஈழத்தமிழர் நலன்

    இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அகதிகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை வரையறுக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு மூலம்  நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழும் வகையில் அனைத்து வசதிகளும், சலுகைகளும் வழங்கப்படும். இரட்டைக் குடியுரிமை வழங்க நடவடிக்கை.

    தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும், தமிழக மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும்.

    இலங்கை இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை, தமிழீழம் அமைப்பது குறித்து  ஐ.நா. பொது வாக்கெடுப்பு ஆகியவற்றுக்காக தமிழக அரசு குரல் கொடுக்கும்.

    நகர்ப்புற வளர்ச்சி

    மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 12 ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை  நடவடிக்கை எடுக்கப்படும்.

    நகரங்களில் பேரூந்து நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வை&ஃபை (WI_FI) வசதி செய்துத் தரப்படும்.

    பெருநகரங்களில் பேரூந்து வசதிகள் இருமடங்காக்கப்படும்.

    பூஜ்ய குப்பை திட்டங்களை நடைமுறைப்படுத்தி குப்பையும், குப்பை மேடுகளும் இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.

    காற்று மாசுபாட்டை முற்றிலும் தடுத்து தூய சுவாசம் உறுதி செய்யப்படும்.

    பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்.

    சட்டம் & ஒழுங்கு

    காவல்துறையினருக்கு 8 மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.

    காவல்துறையினருக்கு  ஊதிய உயர்வும், வீட்டு வசதியும் வழங்கப்படும்.

    காவலர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு வழங்கப்படும்; ஓய்வு பெறும் போது  ஆய்வாளர் நிலைக்கு உயர்வது உறுதி செய்யப்படும்.

    ராணுவத்தினருக்கு வழங்கப்படுவது போன்ற சலுகைகள் வழங்கப்படும்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சலுகை விலையில் பொருட்கள் வழங்கும் கேண்டீன்கள் திறக்கப்படும்..

    பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தனிக்காவல் பிரிவு ஏற்படுத்தப்படும்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிறைத்துறை

    சிறைகள் தண்டனைக் கூடங்களாக இல்லாமல் குற்றம் செய்பவர்களை திருத்தும் இடங்களாக செயல்படும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்படும்.

    சிறைகளில் மனிதஉரிமை மீறல் உள்ளிட்ட குற்றங்கள் நடப்பதற்கு வழியே இல்லாத வகையில்  சிறைக் கையேடு திருத்தி அமைக்கப்படும்.

    சட்டம் & நீதி

    உச்சநீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க மத்திய அரசிடம் முதலமைச்சர் தலைமையிலான குழு வலியுறுத்தும்.

    5 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கிக்கிடக்கும் வழக்குகளை அடுத்த ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து காவல்நிலையங்களிலும் மக்களுக்கு சட்ட உதவி வழங்க வசதியாக ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்படுவார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai