Enable Javscript for better performance
பெட்டிக் கடை நடத்தும் முன்னாள் எம்.எல்.ஏ.!- Dinamani

சுடச்சுட

  

  பதவிக் காலத்தில் மக்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதும், பதவிக் காலத்துக்குப் பிறகு தொழிலதிபராகவோ, கல்வித் தந்தையாகவோ மிடுக்கு மாறாமல் நடமாடுவதும்தான் ஓர் அரசியல்வாதியின் அடையாளமாக நவீன அரசியல் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
   ஆனால், அந்த அடையாளங்கள் அனைத்தையும் உடைக்கும் விதமாகவும், இப்படியும் வாழலாம் என்று பிறருக்கு உணர்த்தும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான ஜி.பி.வெங்கிடு (80).
   ஆறாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், பள்ளிப் பருவத்திலேயே திராவிடர் கழகத்தில் ஐக்கியமாகி, தார்ச் சட்டி ஏந்தி ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். திமுக உருவான போது அதில் இணைந்து, பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்துள்ள வெங்கிடுவுக்கு, திமுக தலைமை 1977 தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது. அப்போது தோல்வி அடைந்த அவர், இரண்டாவது முறையாக 1996 தேர்தலில் அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
   அடிமட்டத்தில் இருந்து உயரத்துக்குச் சென்றவர் என்பதால், எம்.எல்.ஏ. ஆன பிறகும் பேருந்துப் பயணம், தினசரி மக்கள் சந்திப்பு எனச் செயல்பட்ட அவர், எம்.எல்.ஏ. பதவிக் காலம் முடிவடைந்த பிறகு தனது பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார்.
   கோபியில் தனது மகன் நடத்தும் பெட்டிக் கடையில் பணியாற்றி வரும் வெங்கிடு, தனது தேர்தல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:
   அதிமுக எதிர்ப்பு அலை வீசிய 1996 தேர்தலில் கோபி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். கவுண்டர்கள் பெரும்பான்மையான தொகுதியில் முதலியார் இனத்தைச் சேர்ந்த நான், 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.
   அதன்பிறகு, தொகுதி மக்களின் 40 ஆண்டு காலக் கோரிக்கைகளான கள்ளிப்பட்டி - பா.நஞ்சகவுண்டம்பாளையம் பாலம், மேவாணி - அத்தாணி பாலம், அலங்கியம் - குருமந்தூர் பாலம், தமிழகத்தில் முதல் முறையாக வட்டார மருத்துவமனையில் இருதய அவசர சிகிச்சைப் பிரிவு, நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி போன்றவற்றை நிறைவேற்றினேன்.
   திட்டத்துக்கு போதிய நிதி இல்லாத சமயங்களில் மக்களிடம் துண்டேந்தி வசூலித்துக் கொடுத்து முடித்துவைத்தேன். சட்டப் பேரவை உறுப்பினர் பதவிக் காலம் முடிவடைந்த மறுநாளே எனது பெட்டிக் கடைக்கு வந்துவிட்டேன்.
   இப்போது எனக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தைக் கொண்டு தேவைகளை நிறைவு செய்து கொள்கிறேன். எதிரணியினரும் பாராட்டும் விதத்தில் செயல்பட்டதால்தான் இப்போதும் எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடிகிறது என்கிறார் வெங்கிடு.
   தமிழ்ப் பற்றாளரும், சுயமரியாதைக்காரருமான வெங்கிடு, தனது 4 மகன்கள், 2 மகள்களுக்கு தூய தமிழில் பெயர் சூட்டியுள்ளார். இவரது மகன்களில் ஒருவரான வெ.குமணன், கோபியில் தாய்த் தமிழ்ப் பள்ளி என்ற பெயரில் தமிழ்ப் பள்ளி நடத்தி வருகிறார்.
   -யு.குமார்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai