Enable Javscript for better performance
இந்த ஓராண்டில் மட்டும் 81 ஜாதி ஆணவக் கொலைகள்: யார் காரணம்?- Dinamani

சுடச்சுட

  

  இந்த ஓராண்டில் மட்டும் 81 ஜாதி ஆணவக் கொலைகள்: யார் காரணம்?

  By சந்திர. பிரவீண்குமார்  |   Published on : 15th April 2016 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் இந்த ஓராண்டில் மட்டும் 81 ஜாதி ஆணவக் கொலைகள் நிகழ்ந்திருப்பதாகவும், கொலையானவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
   வழக்கம் போலவே இந்த முறையும், குறிப்பிட்ட ஜாதியை நோக்கி கண்டனக் கணைகள் தொடுக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க ஜாதியினரின் வன்முறைகளாக சித்திரிக்கப்படுகின்றன. அந்தக் குரல்களில் நியாயம் இல்லாமல் இல்லை.
   இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தற்போது பெருகி வருகின்றன. இதே தமிழகத்தில்தான் கடந்த சில பத்தாண்டுகளாக ஜாதி மறுப்பு இயக்கம் படுவேகமாகப் பரவியது.
   தீண்டாமை மட்டுமல்ல, ஜாதி சார்ந்த அனைத்து அடையாளங்களும் பாவம் என்றே பிரசாரம் முன்வைக்கப்பட்டது. இந்தப் பிரசாரங்களுக்கு அரசியல் ரீதியிலான ஆதரவும் கிடைத்தது. அதன் விளைவாகவே, திராவிடக் கட்சிகளின் ஆட்சி கடந்த ஐம்பதாண்டுகளாகத் தொடர்கிறது.
   ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம், தெரு பெயர்களில் சாதி அடையாளங்களைக் கைவிடுதல் என்று தொடக்க கால சீர்திருத்தங்கள் தெளிவாகவே நடைபெற்றன. இந்தப் பிரசாரங்களுக்குச் செவி சாய்த்த மக்கள், ஜாதி மறுப்புக் கொள்கைகளுக்கு மனப்பூர்வமான ஆதரவுகளை வழங்கியதும் உண்மையே.
   ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, குறிப்பாக அண்மைக் காலங்களில் ஜாதி இயக்கங்கள் பெருகி வருவதற்கு என்ன காரணம் என்று யோசித்தோமா? வேகமாக வளர்ந்த சீர்திருத்தங்கள், புஸ்வாணமாகி விட்டதைக் கவனித்தோமா?
   திராவிட இயக்கங்கள் அனைத்துமே, ஒரு வகையிலான வெறுப்புணர்வில் தோன்றியவை. தமிழகத்தில் நடைபெறும் அனைத்து ஜாதி கொடுமைகளுக்கும் பிராமணர்கள் மட்டுமே காரணம் என்று திராவிடக் கட்சிகள் முழங்கின. அவர்களைக் குறிவைத்தே பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
   சமூகப் பிரச்னைகள் எது நடந்தாலும், நடக்காவிட்டாலும் குறிப்பிட்ட பிரிவினரைக் குற்றம் சொன்னால் போதும் என்று கற்பித்தன. ஜாதியே இல்லை என்று ஒருபுறம் கூறிக் கொண்டு, ஒரு பிரிவினரை மட்டும் கேலி செய்வது எந்த வகையில் ஜாதி ஒழிப்பு என்ற கேள்வியைக் கூட, மக்களால் எழுப்ப முடியவில்லை.
   இப்படி வெறுப்புணர்ச்சி இயல்பிலேயே கற்பிக்கப்பட்டதால், திராவிட இயக்கத்தால் சமூக ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.
   மேல்ஜாதியினரிடம் இருந்து விடுதலை கேட்ட திராவிட இயக்கம், இடைநிலை ஜாதியினருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே நிலவிய வெறுப்புணர்ச்சியை கவனிக்கத் தவறியது. இடைநிலை ஜாதி மக்களிடையே முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டும் போதும் என்ற கணக்கில் திராவிடக் கட்சிகளும் அடங்கிவிட்டன.
   மேலும், திராவிட இயக்கம் கடவுள் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தியது. ஜாதி அடையாளங்கள் வேறு, இறை நம்பிக்கை என்பது வேறு என்ற தெளிவு ஸ்ரீராமானுஜர், மகாத்மா காந்தி போன்றோரிடம் இருந்தது.
   இந்தியாவில் சாமானிய மக்களை இறை நம்பிக்கை சார்ந்தே சீர்திருத்த முடியும் என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். அதனால்தான், ராமானுஜராலும், காந்தியாலும் சாதாரண மக்கள் மத்தியில் ஜாதி வேறுபாடுகளைப் பற்றி பேச முடிந்தது. அவர்களைக் கொண்டே, தீண்டாமையையும், ஜாதி வேறுபாடுகளையும் களைய முடிந்தது.
   "எங்கள் கட்சி இன்ன ஜாதியினருக்கு இந்த நற்பணிகளைச் செய்துள்ளது' என்றுதான் திராவிடக் கட்சிகள் பிரசாரமே செய்கின்றன. தேர்தல் களத்தில் அந்தந்த தொகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் ஜாதியினரையே தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களாக முன்னிறுத்தின. பின்தங்கிய மக்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டை தங்கள் இஷ்டத்துக்குத் திருத்தியமைத்தன.
   இடைநிலை ஜாதி அமைப்புகள் தோன்றுவதற்கு ஊக்கமளித்தன. இப்படி எல்லா இடங்களிலும் ஜாதியை நினைவூட்டிக் கொண்டே வருகின்றன.
   இத்தகைய முரண்பாடுகளின் பலன்களைதான் இன்று அனுபவித்து வருகிறோம்.
   இன்று பிராமணர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் இல்லை. சமூக சீர்திருத்த சிந்தனைகளில் இன்றைய பிராமணர்கள் வெகுதூரம் முன்னேறி விட்டனர். அதே நேரத்தில், இடைநிலை ஜாதி அமைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
   இன்றைய ஜாதி கலவரங்கள், பிராமணர்களுக்கும், மற்றவர்களுக்கும் இல்லை. இடைநிலை ஜாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையேதான் ஜாதி சண்டைகள் நடைபெறுகின்றன. இந்த மாற்றங்கள், திராவிடக் கட்சிகள் அரசியல் ரீதியான வெற்றியை மட்டுமே அடைந்துள்ளது என்பதை நிரூபிக்கிறது.
   மேலும், திராவிடக் கட்சிகள் திணித்த செயற்கையான சித்தாந்தத்தை ஏற்காத மக்கள், மீண்டும் கடவுள் நம்பிக்கையை நோக்கி நகர்ந்துவிட்டனர். அதன் விளைவாக, சபரிமலை, திருவண்ணாமலை, பழனி என புனிதத் தலங்கள் தோறும் தமிழர்கள் குவிகின்றனர்.
   இன்று கலவரங்களைத் தூண்டும் ஜாதிகளும் சரி, கலவரங்களில் பாதிக்கப்படும் ஜாதியினரும் சரி, ஜாதி ஒழிப்பின் உருவகமாகப் போற்றப்பட்ட பெரியாரின் புகைப்படங்களைத் தாங்கியே சுவரொட்டிகள் ஒட்டுகின்றன. இந்த முரண்பாட்டை திராவிடக் கட்சிகள் கண்டித்திருக்க வேண்டும். பெரியார் கண்ட கனவு இதுவல்ல என்று பொங்கியிருக்க வேண்டும். ÷
   இனியாவது, மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். வெறுப்புணர்ச்சி சார்ந்த சீர்திருத்தத்தை யார் முன்வைத்தாலும் அதை வரவேற்காமல், அனைவரையும் ஒருங்கிணைக்கும் வளர்ச்சியைப் பேசுவோரை ஆதரிக்க வேண்டும்.
   அதற்கான தேவையைத்தான் ஜாதி ஆணவக் கொலைகள் நமக்கு உணர்த்திக் கொண்டே வருகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai