தமிழக அரசியல் சூழலில் மாற்றம் ஏற்படும்: சீமான்
By DN | Published On : 19th April 2016 09:27 AM | Last Updated : 19th April 2016 09:27 AM | அ+அ அ- |

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் மே-1-ஆம் தேதிக்குப் பிறகு நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு திங்கள்கிழமை வருகை தந்த சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கட்சி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நடைபெறவுள்ள 2016 சட்டப் பேரவைக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.
அரசியல் மாற்றம், தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு, லஞ்சம், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றை முன்னிறுத்தி எங்களது பிரசாரம் இருக்கும்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் முழக்கங்களை எழுப்பி வருகின்றன.
மாற்றம் என்பது மாறாதது என்பதால், தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படவேண்டும். மாற்றம் என்பது சொல் மட்டும் அல்ல, அது செயல் என்பதால், மாற்றத்திற்கான செயல்பாடுகளில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம்.
தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரை, அதிமுக, திமுகவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். தேர்தல் ஆணைய அதிகாரிகளும், அரசு அதிகாரியாகப் பணியாற்றிய பின்னர்தான், தேர்தல் ஆணைய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் திராவிடக் கட்சிகளுக்குத்தான் துணை போவார்கள். தற்போது திராவிடக் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவாக இருப்பது போன்ற மாயை மட்டும் நிலவுகிறது. மே 1-க்குப் பின்னர் திராவிடக் கட்சிகளுக்கு எதிரான புயல் வீசும் என்றார் அவர்.